இன்று முதல் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணிநேர மின்வெட்டு!

 

இன்று சனிக்கிழமை(04.12.2021) முதல் மாலை-06 மணி தொடக்கம் இரவு-09.30 மணி வரையான காலப் பகுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்குத் திரும்பும் வரை சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நேற்று மின்சார விநியோகம் தடைப்பட்ட போது நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன.செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கிகளைச் செயற்படுத்த குறைந்தபட்சம் நான்கு நாட்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாகவும் சுலக்சன ஜயவர்தன தெரிவித்தார்.

இதனால், சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.