13 ஆவது திருத்தத்திற்கு எதிராகத் திட்டமிட்டவாறு 30 ஆம் திகதி நல்லூரில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி

 

13 ஆவது திருத்தத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியையும்,பேரணியையும் தடுப்பதற்காகவும், குழப்புவதற்காகவும் பல திட்டமிட்ட பிரசாரங்களும், கட்டுக் கதைகளும் நன்கு கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. எனினும், இவ்வாறான திட்டமிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களுக்கும், வதந்திகளுக்கும், போலிச் செய்திகளுக்கும் எங்கள் மக்கள் எடுபட வேண்டாம். திட்டமிட்டவாறு எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09.30 மணிக்கு 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நல்லூர் ஆலயச் சூழலில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஆரம்பமாகும் எனவும், இந்தப் பேரணியில் அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக அணிதிரளுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27.01.2022) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்மக்களின் எதிர்காலத்தை முன்னிட்டு 13 ஆவது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டிக்குக் குறைவான எந்தவொரு தீர்வையும் கிஞ்சித்தும் கருத்திலெடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை-09.30 மணிக்கு நல்லூரில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். தமிழினத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விடயமாக இது காணப்படுவதால் கட்சி பேதங்களைக் கடந்து சகல மக்களும், தமிழ்த்தேசியப் பற்றாளர்களும் இந்த மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

அன்பான வர்த்தகப் பெருமக்களே! விவசாயிகளே! மீனவ உறவுகளே! தொழிலாளர்களே! முதலாளிகளே! ஆசிரியப் பெருந்தகைகளே! மாணவர்களே! குடும்பத் தலைவர்களே! இல்லத்தரசிகளே! நீங்கள் அனைவரும் தமிழ்மக்களாக, ஒரு தேசமாகத் திரண்டு 13 ஆவது திருத்தத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என விநயமாக வேண்டுகின்றோம். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-02 மணி வரையாவது மருந்தகங்கள், உணவுச் சாலைகள், துவிச்சக்கரவண்டித் திருத்தகங்கள் போன்ற அடிப்படை விடயங்கள் தவிர்ந்த வர்த்தகர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி எங்கள் பேரணிக்குப் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தனியார் கல்வி நிலையத்தின் கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தி மாணவர்களின் எழுச்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக, சமஷ்டிக்கான தாகத்தை வலியுறுத்தி அனைவரும் அணிதிரளுவதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கும், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கடிதம் எழுதிய தரப்புக்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை நாங்கள் காத்திரமாகச் சொல்ல வேண்டிய தேவையிருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)