ஏழாலை சிவனுக்கு திங்கட்கிழமை கொடியேற்றம்: முன் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரம்(Video, Photos)

‘ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை சிவன் என அழைக்கப்படும் யாழ்.ஏழாலை புங்கடி சொர்ணாம்பிகா உடனுறை அம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை(27.6.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

இவ்வாலய மஹோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இவ்வாலய மஹோற்சவத்தை முன்னிட்டு ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்திற்கு அருகில் ஏழாலை இந்து இளைஞர் சபையால் புதிதாக வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

மஹோற்சவத்தின் முன்னேற்பாடாக ஆலய வெளிவீதியில் ஏற்கனவே ஏழாலை இந்து இளைஞர் சபையினரால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சனிக்கிழமையும்(25.6.2022) பிற்பகல்-4 மணி முதல் இரவு-7 மணி வரை ஆலயத்தின் முன்பகுதி மேற்படி ஆலய பரிபாலன சபையின் தற்போதைய தலைவர் மற்றும் அணுக்கத் தொண்டர்களால் சிரமதானப் பணி மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

இதேவேளை, இவ்வாலய மஹோற்சவத்தை முன்னிட்டு வலி.தெற்குப் பிரதேச சபையின் இரண்டாம் வட்டார உறுப்பினர் சி.லகிந்தனின் வட்டார நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படாத நிலையில் உள்ள ஆலய வெளிவீதியின் புனரமைப்புப் பணிகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)