இலங்கை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவுவது தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை கொள்ள வேண்டும்(Video, Photo)

என்றும் இல்லாதவாறு இலங்கை நாடு கையேந்தும் நாடாக, அவலப்படும் நாடாக இருக்கின்றதொரு சூழ்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மக்களின் உணவுப் பிரச்சினை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தது போன்று தற்போதைய நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு உதவுவது தொடர்பிலும் தொடர்ந்தும் அக்கறை கொள்ள வேண்டும் என தமிழ்மக்கள் சார்பில் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன் எனப் பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளரும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

எமது செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து இலங்கையில் மக்கள் படும் அவலத்திற்காக அரிசி, மா மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியிருந்தனர். உண்மையில் இது பாராட்டுதற்கு உரிய விடயம். இதுதொடர்பில் தமிழ்மக்கள் சார்பில் நாங்கள் கடைமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில், இந்த இக்கட்டான சூழலில் எங்களுக்கு அயலில் உள்ள உறவு வழி நாடொன்று எங்கள் மக்களின் பசியைப் போக்குவதற்காக முன்னுதாரணமான வகையில் பணி செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. இதனை மகிழ்ச்சியுடன் நாங்கள் வரவேற்கின்றோம்.

இந்த நாட்டில் போர் காரணமாகத் தமிழ்மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும் அனைவரும் துன்பப்படுகின்றனர்.
இந்நிலையில் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு .

தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி இந்தியப் பிரதமர் இந்த விடயத்தை முன்னின்று செயற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியற் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்.

குறிப்பாக இலங்கையில் பலாலி விமான நிலையம் மீளவும் செயற்படவிருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக அயராது உழைத்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும், இதற்கான சம்மதத்தை வெளியிட்ட இலங்கை அரசாங்கமும் நன்றிக்கு உரியவர்கள்.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)