இணுவில் அறிவாலயத்தில் அரங்கேறி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த தலை எழுத்து நாடகம்(Video, Photos)

அரச ஊழியருக்கான நாடகப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை குறுநாடகப் போட்டியில் அரசின் விருது பெற்ற நாடகக் கலைஞர் நா.கிருபாகரனைப் பாராட்டிக் கெளரவிக்கும் கெளரவிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(24.7.2022) பிற்பகல்-3.30 மணி முதல் அவரது சொந்த மண்ணான யாழ்.இணுவிலில் அமைந்துள்ள அறிவாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவரும், இணுவில் வேரும் விழுதுகளும் அமைப்பின் அமைப்பாளருமான பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ந.ரதிதரன் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேற்படி விழா நிகழ்வின் இறுதியாக விழா நாயகரான கிருபாகரன் பிரதான பாத்திரமேற்று நடித்த சண் நாடகக் குழுவினரின் “தலை எழுத்து” எனும் நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.

இந்த நாடகத்தில் நடித்த அனைவரும் தங்கள் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தினர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் இந்த நாடகம் அமைந்திருந்ததுடன் பலரதும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டது.

இதேவேளை, இந்த விழா நிகழ்வில் ‘தலை எழுத்து’ நாடகத்தின் முழுமையான காட்சிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.

(சிறப்புத் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)