ரணில் ஆட்சியின் அடக்கு முறைக்குப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கடும் கண்டனம்

நேற்றைய தினம்(03.8.2022) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரச அடக்குமுறையின் கீழ் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றை உச்சரித்துக் கொண்டு அடக்குமுறை ஆட்சியை முன்னெடுத்து வரும் ரணில் தலைமையிலான பாசிச ஆட்சியின் கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கிறது. இச் செயலையும், ஏற்கனவே இதுபோன்று இடம்பெற்று வந்த கைதுகளையும் எமது கட்சி மத்திய குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழு சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் இன்று வியாழக்கிழமை(04.8.2022) இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தோழர் ஜோசப் ஸ்டாலின் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அதே போன்று அனைத்து மக்களது ஜனநாயகம் சுதந்திரம் மனித உரிமை போன்றவற்றுக்கான போராட்டங்களில் முன்னின்று வந்த ஒரு ஜனநாயகப் போராளியாவார். அத்தகைய ஒருவரைக் கைது செய்திருப்பது ரணில் ஆட்சியின் திட்டமிட்ட பாசிசப் பழிவாங்கலும், போராடும் மக்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுமாகும். இதனை எமது கட்சியின் மத்திய குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் ஸ்டாலினை உடன் விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

அதேபோன்று ஏற்கனவே காலிமுகத்திடல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கூறி வேறு வேறு பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் எமது கட்சி வலியுறுத்துகிறது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(செ.ரவிசாந்)