யாழ்.பல்கலைக்கழக அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் சுன்னாகம் குமாரசாமிப் புலவரின் பழந்தமிழ் நூல் வெளியீடு(Video, Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்று முன்தினம் புதன்கிழமை(03.8.2022) காலை-09 மணி முதல் மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மீள் பதிப்புச் செய்த கிடைத்தற்கு அரிய பழந்தமிழ் நூலான சுன்னாகம் குமாரசாமிப் புலவர் எழுதிய ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்’ எனும் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

மேலும் மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் கட்டுரைத் தொகுப்புக்கள் உள்ளடங்கிய மலர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த-2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் ஆற்றிய உரையின் சிறப்பு உரைத் தொகுப்பு என்பனவும் வெளியீடு செய்து வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் குறித்த நூல்களை வெளியீடு செய்து வைக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதற்பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரன் நூலின் அறிமுக உரையினை நிகழ்த்தினார்.

கல்லடி வேலுப் பிள்ளை எழுதிய மற்றொரு பழந்தமிழ் நூலான ‘யாழ்ப்பாண வைபவக் கெளமுகி’ எனும் பழந்தமிழ் நூலும் மேற்படி மாநாட்டில் வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட போதிலும் குறித்த நூலின் மொழிநடையைக் கருத்திற் கொண்டும், பக்கங்களின் கனதியைக் கருத்திற் கொண்டும் அடுத்த சில மாதங்களில் வெளியீடு செய்து வைக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் போது பழந்தமிழ் நூல்களான நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிறுவர் செந்தமிழ், மட்டுவில் க.வேற்பிள்ளையின் விருத்தியுரையுடனான திருவாதவூரடிகள் புராணம், இயற்றமிழ்ப் போதகாசிரியர் ந.சுப்பையபிள்ளையின் உரைக் குறிப்புக்களுடனான தஞ்சைவாணன் கோவை ஆகிய மூன்று நூல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் வெளியீடு செய்து வைக்கப்பட்டன.

இதேவேளை, வருடாவருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற உள்ள அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் பல பழந்தமிழ் நூல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் மீள் பதிப்புச் செய்து வெளியீடு செய்து வைக்கப்பட உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)