சித்த வைத்தியத்திற்கு மீண்டும் வித்திட்டவர் வைத்தியர் ஏழாலை பொன்னையா(Photo)

செகராஜசேகரம், பரராஜசேகரம் போன்ற மன்னர் காலத்து ஏடுகள் பெரிய பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்களால் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும். இந்த ஏடுகளைச் சில வைத்தியர்கள் வைத்திருந்தார்கள். ஏழாலையைச் சேர்ந்த பொன்னையா என்ற வைத்தியரின் கைகளில் அந்த ஏடுகள் அகப்பட்டன.அவர் அந்த ஏடுகளைத் தடவித் தடவி ஊற்றுப் பேனா கொண்டு அவற்றில் உள்ளதை எழுதினார். அவ்வாறு எழுதிய வைத்தியம் தான் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் சித்த வைத்தியம். பரராஜசேகரம் என்கிற வைத்தியநூல் தமிழில் எழுத்துவடிவமாக வருவதற்கு வித்திட்டவர் ஏழாலையைச் சேர்ந்த பொன்னையா என்ற வைத்தியர் ஆவார் என யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு கடந்த புதன்கிழமை(03.8.2022) மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழகம் உருவாக முன்னரே தமிழியல் ஆய்வுகளைச் செய்வதற்கு சிலர் துணையாக விளங்கியுள்ளனர்.ஒரு வைத்தியர் செய்த உதவி மூலம் தான் பரராஜசேகரம் என்ற வைத்தியநூல் ஏடு காப்பாற்றப்பட்டுள்ளது.

தற்போது பரராஜசேகரம், செகராஜசேகரம் எனத் தமிழ்வேந்தர் காலத்துச் சொத்துக்களுக்கெல்லாம் பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைகள் வெளிவருகின்றன. இவ்வாறான நூல்கள் எல்லாம் சில கிராமங்களில் வைத்துத் தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல ஏடுகள் ஆய்வு செய்யப்படாமலேயே உள்ளன. எனவே, தமிழியல் ஆய்வு மிக முக்கியமானது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)