யாழ்.பல்கலைக்கழகத்தில் நான்கு மரபுவழித் தமிழ்ப் புலமையாளர்களுக்கு சிறப்புக் கெளரவம்(Videos, Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு கடந்த புதன்கிழமை(03.8.2022) காலை-09 மணி முதல் மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்மொழிக்கும் பெரும் தொண்டாற்றிய ஈழத்தின் நான்கு மரபுவழித் தமிழ்ப் புலமையாளர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் சிறப்புக் கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் காலம் சென்ற பிரபல இடதுசாரியான வே.ஏ. சுப்பிரமணியத்தின் துணைவியும், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள் எனப் பல்வேறு இலக்கிய நூல்களைத் தமிழ்மொழிக்குத் தந்தவரும், பன்மொழிப் புலமையும், பேச்சாற்றல் மிக்கவருமான திருமதி.வள்ளியம்மை சுப்பிரமணியம், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியும், இலக்கியம், இலக்கணம், வரலாறு மொழி வரலாறு தொடர்பான ஆறுநூல்களை வெளியிட்டுள்ளவரும், ஆசிரியரும், வருகைதரு விரிவுரையாளருமான செல்வி.யோகலட்சுமி சோமசுந்தரம், தமிழ்ப் பண்டிதரும், தான் கற்ற மரபுவழிக் கல்வியைச் சமூகத்திற்குத் தொடர்ச்சியாகக் கையளித்து வருபவருமான திருமதி.மங்கையர்க்கரசி நடராசா, ஓய்வுநிலை ஆசிரியரும், வருகைதரு விரிவுரையாளரும், ஓய்வின் பின்னரும் இலவசமாகத் தமிழ்மொழியை மாணவர்களுக்குப் போதித்து வருபவருமான திருமதி.புனிதவதியார் சிவக்கொழுந்து ஆகியோரிற்கே இவ்வாறு சிறப்புக் கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த கெளரவங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நால்வருக்கும் வழங்கிச் சிறப்பித்தார்.

இதேவேளை, கடந்த-2021 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் யாழ்.ஊர்காவற்துறை நாரந்தனையைச் சேர்ந்த தமிழிலும், சைவ இலக்கியங்கள், தத்துவங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட பண்டிதர் க.ஈஸ்வரநாதபிள்ளை, 30 இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதியவரும், மானவர்களுக்கெனப் பல படைப்புக்களைத் தந்தவருமான இணுவிலைச் சேர்ந்த பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை, தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் மிகுந்த புலமையுடைய வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைச் சேர்ந்த பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன், தமிழ் இலக்கியத்தில் மரபு, நவீனம் ஆகிய இரண்டிலும் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவரான அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பண்டிதர் கலாநிதி- செல்லையா திருநாவுக்கரசு ஆகியோருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் மேடையில் வைத்துச் சிறப்புக் கெளரவங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாத ஈழத்து மரபுவழிக் கல்வி ஆளுமைகளில் முக்கியமான மூத்த ஆளுமையாக விளங்கும் பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை, தமிழுக்கும், சைவத்துக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய பண்டிதர். மு.சு.வேலாயுதபிள்ளை, 25 இற்கும் மேற்பட்ட இசைப் பாடல்களை எழுதியவரும், தமிழ் அகராதி உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்தவருமான பண்டிதர் வீ.பரந்தாமன் ஆகிய புலமையாளர்களுக்கான கெளரவங்கள் அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு, காணொளிகள் மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)