கோண்டாவில் ஞானப்பழனி முருகனுக்கு நாளை திருக்குடமுழுக்குப் பெருவிழா(Photos)

அற்புதங்கள் பல நிறைந்த யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனி முருகன் ஆலயத் திருக்குடமுழுக்குப் பெருவிழா ஆவணி ஓண நன்னாளான நாளை-8 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-7.38 மணி முதல் காலை-8.36 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் வெகுசிறப்பாக நடைபெறும்.

திருக்குடமுழுக்குப் பெருவிழாவுக்கான கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை(02.9.2022) அதிகாலை-5.30 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை-8 மணி முதல் இன்று புதன்கிழமை முற்பகல்-11 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

திருக் குடமுழுக்குப் பெருவிழாவிற்கான புண்ணிய நீர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (06.9.2022) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி ஸ்ரீசெல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சமுத்திரத்தில் வழிபாடுகள் இடம்பெற்றது.இதனையடுத்துக் குடங்களில் நீர் எடுத்து வரப்பட்டது. கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்களுடன் கோண்டாவில் ஞானப்பழனி முருகன் ஆலயத்திற்கு நடைபவனியாக புனிதநீர் கொண்டு வரப்பட்டது.

நாளைய மஹாகும்பாபிஷேகப் பெருவிழா மேற்படி ஆலயப் பிரதமகுரு வேதாகம வித்துவ சிரோன்மணி சிவஸ்ரீ.ரவீந்திரதாச சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெறும்.

இதேவேளை, இவ்வாலயத் திருக்குடமுழுக்குப் பெருவிழாவைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல திருமஞ்சனம் இடம்பெறும் எனவும் மேற்படி ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர்.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)