மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி: அனலைதீவு சதாசிவ வித்தியாலயப் பெண்கள் அணி 2 ஆவது தடவையும் சம்பியன்(Photo)

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டித் தொடரில் அனலைதீவு சதாசிவ வித்தியாலயத்தின் மென்பந்து துடுப்பாட்டப் பெண்கள் அணி தொடர்ந்து இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பெற்றுத் தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது .

மாகாண மட்ட மென்பந்து துடுப்பாட்டப் போட்டி நேற்றுச் சனிக்கிழமையும் (10.09.2022), இன்று ஞாயிற்றுக்கிழமையும் (11.09.2022) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான அனலைதீவு சதாசிவ வித்தியாலய அணி முழங்காவில் மகாவித்தியாலய அணியையும், காலிறுதிப் போட்டியில் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியையும், அரையிறுதிப் போட்டியில் வாதரவத்தை விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தையும், இறுதிப் போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியையும் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக மாகாண மட்டச் சம்பியனாகித் தனது பாடசாலைக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)