புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு(Photo)

அண்மையில் இடம்பெற்ற பெண்களுக்கான இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டித் தொடரில் புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தினைப் பெற்று இலங்கை முழுவதுமான தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இந்த அணிக்கான பயிற்சி முகாம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது.18 வயதுப் பெண்கள் பிரிவு அணியினரும் இப் பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்தினர் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டுக் கழக உறுப்பினரும், வேலணைப் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலனிடம் நேற்றுப் புதன்கிழமை(14.9.2022) அவசர வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்துத் துரிதமாகச் செயற்பட்ட நாவலன் மாணவிகளுக்கான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதற்கமைய யாழ்.கந்தர்மடத்தில் அமைந்துள்ள பீட்சா உணவக உரிமையாளரும், சமூக சேவையாளருமான கோபாலபிள்ளை முரளீதரனின் நிதிப் பங்களிப்பில் விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு யாழ்.நகரில் வைத்து நாவலன், முரளீதரன் ஆகியோர் இணைந்து புங்குடுதீவு மத்திய கல்லூரியின் உப அதிபர் கி.விநோதனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)