தெல்லிநகர் துர்க்கைத் தாயின் தேர்த் திருவிழா நாளில் துர்க்கை வடிவில் பறவைக் காவடியில் இளைஞன்: காணொளிக் காட்சி(Video, Photos)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா கடந்த-07 ஆம் திகதி புதன்கிழமை காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ்வாலயச் சித்திரத் தேர்ப் பவனியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் அடியவர்கள் விதம் விதமான காவடிகள் எடுத்துத் துர்க்கை அம்பாளை நாடி வந்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியிருந்தனர்.

இந் நிலையில் துர்க்கை அம்பாளின் சித்திரத் தேர் இருப்பிடம் சென்றடைந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் யாழ்.கட்டுவனைச் சேர்ந்த 32 வயதான மகாலிங்கம் சபேசன் என்ற இளைஞன் துர்க்கை அம்பாள் போன்று வேடமணிந்து துர்க்கை அம்பாளின் அருள் வேண்டி ஆலயத்தை நோக்கி வருகை தந்தார்.

தனது துணைவியாரைப் பீடித்துள்ள நோய் தீர வேண்டியே கட்டுவன் ஐயப்பன் ஆலயத்திலிருந்து துர்க்கை அம்பாள் ஆலயத்திற்குப் பறவைக் காவடி எடுத்துத் தனது நேர்த்தியை நிறைவு செய்திருந்தார்.

மேற்படி இளைஞன் துர்க்கை அம்பாள் வடிவில் வந்த காட்சி வீதியால் சென்றவர்களினதும், ஆலயத்தில் நின்றிருந்த அடியவர்களினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதுதொடர்பான செய்தியும், புகைப்படங்களும் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சிறு காணொளிக் காட்சியொன்றை அடியவர்களினதும், மக்களினதும் பார்வைக்காக வெளியிடுகின்றோம்.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)