காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட எட்டு தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் தமிழக மீனவர்கள் எட்டுப் பேர் எதிர்வரும்-4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த எட்டு மீனவர்களும் இன்று அதிகாலை-1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கடற்படையினரின் திடீர்ச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் தமிழகத்தின் ஜெகதாப் பட்டணம் மற்றும் நாகபட்டணத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும்-4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகு மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)