அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளைப் பெற வேண்டும்: யாழில் வலியுறுத்தல்(Photos)

யாழ்.மாவட்டச் செயலகத்தில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை(21.9.2022) முற்பகல்-10.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாவிடில் இறப்புக்கள் அதிகம் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக இந்தக் கலந்துரையாடலில்
சுட்டிக் காட்டப்பட்டது.

பொதுமக்களுக்குப் பைஸர் தடுப்பூசிகளை ஏற்றுதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் வழங்குமாறும் பிரதேச செயலாளர்களிற்கு குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, மேற்படி கலந்துரையாடலில் யாழ்.மாவட்டப் பிராந்தியச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன், சமுதாய மருத்துவ நிபுணர் மருத்துவர் சிவகணேஷ் மற்றும் பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)