தியாகதீபத்தின் நினைவேந்தலைக் குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்!(Video, Photo)

திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்கள் மூலம் தியாக தீபத்தின் நினைவேந்தலைக் குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம் என முன்னாள் மூத்த போராளி பொன்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(20.9.2022)முற்பகல்-10.15 மணியளவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்தப் புனிதமான இடத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் சம்பந்தமாக ஊடகவியலாளார் சந்திப்பினை நடாத்தும் நிலைக்கு யாழ்.மாநகரசபை எம்மைத் தள்ளியுள்ளது.

ஒரு மெல்லிய நெருப்பிற்குள் நின்றே எமது தியாகச் செம்மல்களின் நினைவேந்தல்களைத் தற்போதுவரை நடாத்திக்கொண்டு வருகின்றோம். இன்று ழுழு நெருப்பிற்குள் நின்று எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தேசியத்தலைவரின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்து ஒற்றையாட்சியின் கீழான செயற்பாட்டை எதிர்த்துப் போராடியே தியாகச் செல்வங்கள் மடிந்தன. அவர்களின் தியாகங்களைச் சரியாக வழிநடத்த எம்மாலான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களாக தியாக தீபத்தின் நினைவேந்தலை நடாத்திவரும் நினைவேந்தல் ஏற்பட்டுக் குழுவோடு எந்தவிதக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது தியாக தீபத்தின் நினைவேந்தலைக் குழப்புவதற்கான திட்டமிட்ட சதி முயற்சியினை யாழ்.மாநகர சபை முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள நினைவேந்தல் கட்டமைப்பில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்தே தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தியாக தீபத்தின் நினைவேந்தலினைக் குழப்பி மக்கள் மயப்படுத்தப்பட்டு வரும் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச்செய்வதே புதிதாக உருவாக்கப்பட்ட திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்களின் நோக்கமாகும்.

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவால் நினைவேந்தல் ஆரம்பித்து ஐந்து நாட்கள் கடந்த நிலையின் இன்று புதிதாக தோன்றும் திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்கள் எமது போராட்டத்தின் தியாகங்களுக்குச் செய்யும் துரோக நடவடிக்கையாகும்.

விடுதலை உணர்வுகள் மக்கள் மத்தியிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற சதித்திட்டத்தினை இந்தக் கட்டமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், கடந்த வெள்ளியன்று மாநகரசபை முதல்வரினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த திடீர் நினைவேந்தல் கட்டமைப்பிற்கான கூட்டத்தில் பங்குபற்றியிருந்த முன்னாள் போராளி செழியன் தியாக தீபத்தின் நினைவேந்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும், இராணுவத்தினரையும் கூட இணைத்துக்கொள்வோம் என்றதொரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வேளையில் அங்கு கூடியிருந்த ஒரு முன்னாள் போராளியைத் தவிர வேறு எவருமே அவருடைய கருத்திற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்தப் போராளியைத் தவிர்த்தே ஏழு பேர் கொண்ட கட்டமைப்பானது உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படியானவர்கள் தியாக தீபத்தின் நினைவேந்தலைப் பொறுப்பெடுப்பதென்பது நினைவேந்தலின் புனிதத் தன்மையினை மாசுபடுத்துவதாகவே அமையும் என்பதனை நான் தெட்டத்தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இதுவரைகாலமும் எந்தவொரு குழப்பங்களுமின்றி நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. அவ்வாறு ஏதும் குழப்பங்கள் இருந்தால் கூடக் கடந்த வருடம் நினைவேந்தல் நிறைவுற்று ஒரு வருட காலம் இருந்த நிலையில் அதனை ஏற்பாட்டுக் குழுவிற்கு அறியப்படுத்தியிருக்கலாம். அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது இன்று இந்தத் திடீர் கட்டமைப்பினை உருவாக்கியிருப்பதென்பது மக்களைக் குழப்பத்திற்கு உட்படுத்தி, தியாக வரலாறுகளை மழுங்கடிக்கச்செய்யும் திட்டமிட்ட சதியே என்பது புலனாகின்றது.

குறித்த திடீர் நினைவேந்தல் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்ட ஒருவர் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கைதிகளுடைய போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார். எனினும் போராட்டக்காரருக்குப் போராட்டத்தின் போதும், போராட்டத்திற்குப் பின்னரும் எந்த வழியிலும் அவர்களுக்கான உதவிகளை வழங்காமல் போராட்டத்திற்கே தாமதமாக வருகை தந்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் குறித்த உறவுகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்ததுடன் போராட்டத்தில் நாமும் பங்கெடுத்திருந்தோம். இவ்வாறாக மக்களை அழைத்து நடுவீதியில் விட்டுச்சென்றவரால் எவ்வாறு இந்த நினைவேந்தலை நேர்த்தியாகச் செய்து விட முடியும்?

மேலும், இந்த திடீர் கட்டமைப்பினைச் சார்ந்தவர்கள் தாயகத்தில் எமது மக்கள் சார்ந்து செயற்படுத்த வேண்டிய ஏராளமான விடயங்கள் காணப்படுகின்றது. அவற்றில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என நான் அவர்களுக்கு கூறிக் கொள்கின்றேன்.

தியாக தீபத்தின் ஐந்து அம்சக்கோரிக்கைகளுள் ஒன்றான நிலஆக்கிரமிப்பு குருந்தூர் மலையில் சிங்களப் பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, இங்கு நினைவேந்தலினைக் குழப்பாமல் குருந்தூர் மலைக்குச் சென்று தியாக தீபத்தின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்றேன்.

எது எவ்வாறாயினும் வழமை போலவே தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் முன்னெடுக்கப்படும் என்பதுடன் அதனைக் குழப்பும் வகையில் எந்த தரப்பு செயற்பட்டாலும் நாம் அவற்றுக்கெதிராக குரல் எழுப்புவோம் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:-செ.ரவிசாந்)