வட்டுக்கோட்டையில் நாளை நாடக ஆசிரியர் கணேசராசாவின் நூல் வெளியீடும் ஆற்றுகையும்(Photos)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.வட்டு இந்துக் கல்லூரியில் 23,24,25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் இரண்டாவது நாளான நாளை சனிக்கிழமை(24.9.2022) பிற்பகல்-2.30 மணியளவில் பிரபல நாடக ஆசிரியரும், ஈழத் தமிழ் நாடகத்துறையின் மிகவும் முக்கியத்துவம் பெறும் நெறியாளருமான பு.கணேசராசா தமிழ்த்தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற நாடகங்களின் தொகுப்பான “பொறுப்பது உன் விதியோ?” நூல் வெளியீடு இடம்பெற உள்ளது.

மூத்த சட்டத்தரணியும், எழுத்தாளருமான சோ.தேவராஜா தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளரும், காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவருமான சு.சுந்தரசிவம் நூல் வெளியீட்டு உரையினையும், ஆசிரியரும், எழுத்தாளருமான திருமதி. ஸ்ரீலேகா பேரின்பகுமார் நூல் அறிமுக உரையினையும் ஆற்ற உள்ளனர்.

உளவளத் துணையாளர் நா.நவராஜ், ஆசிரியரும், ஓவியருமான க.நிமலதாஸ் ஆகியோர் கருத்துரைகளையும், நூலாசிரியர் பு.கணேசராஜா ஏற்புரையினையும் நிகழ்த்த உள்ளனர்.

குறித்த நிகழ்வைக் கலாசார உத்தியோகத்தர் ச.தனுஜன் தொகுத்து வழங்க உள்ளார்.

இந் நூல் வெளியீட்டைத் தொடர்ந்து மாலை-4.30 மணியளவில் சண் நாடகக் குழுவினரின் தயாரிப்பில் உருவான தலையெழுத்து மற்றும் வீட்டுக்காரன் ஆகிய நாடகங்களும் ஆற்றுகை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)