யாழில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் திருவாசக அரண்மனைத் திறப்பு விழா: ஒரு சிறப்புப் பார்வை (Video)

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் ஏ-09 பிரதான வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமித் திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகை தந்த பல்லாயிரக்காண பக்தர்களின் பங்கேற்புடன் திருவாசக அரண்மணைத் திறப்புவிழா இன்றைய தினம் களைகட்டியிருந்தது.

இன்று பிற்பகல்-04 மணியளவில் திருவாசக அரண்மனை அமைப்பதற்கு நிலத்தையும், நிதியையும் வழங்கியுதவிய புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழும் தெல்லிப்பழையைச் சேர்ந்த இதய வைத்திய நிபுணர் மனமோகன் தம்பதிகள் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு திருவாசக அரண்மனையைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தின் பிரபலமான நாதஸ்வர வித்துவான்கள் ஈழநல்லூர் நாதஸ்வர இளவரசன் பி. எஸ். பாலமுருகன் குழுவினர், மறைந்த பிரபல தவில் வித்துவான் தெட்சணாமூர்த்தியின் புதல்வன் தெட்சணாமூர்த்தி உதயசங்கர் குழுவினரின் தவில்,நாதஸ்வர முழக்கத்துடனும், திருவாசக அரண்மனையில் பொருத்தப்பட்டுள்ள 108 மணிகள் நாதஸ்வர இசை எழுப்ப திருவாசக அரண்மனை வாயிலிருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து திருவாசக அரண்மனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவாசக ஆராய்ச்சி நூல்நிலையத்தை புலம்பெயர்ந்து இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் கணக்காளர் சூ. பாலசிங்கம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் 108 மணிகளும் நாதம் ஒலிக்க, பிரபல நாதஸ்வர,தவில் வித்துவான்களின் இசை அர்ப்பணத்துடன் அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்களைச் சூழ பல நூற்றுக்கணக்கான பக்தர்களும் வலம் வந்த காட்சி அற்புதமானது.

திருவாசக அரண்மனையில் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மணிவாசகரால் அருளப்பட்ட 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய 658 திருவாசகப் பாடல்களையும் தம் கண்களால் கண்டு அனைவரும் பக்திப் பரவசத்தில் மெய்மறந்து திளைத்தனர்.

குறிப்பாக சிவபுராணம் சிங்களம், மலையாளம், கன்னடம், தெலுங்கு,யப்பான், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் கருங்கல்லில் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்ப்பதாய் அமைந்துள்ளதாக திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து திருவாசக அரண்மணையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கருங்கற் தேர் நிர்மாணிப்பதற்கான நிதிப்பங்களிப்பை வழங்கிய புலம்பெயர்ந்து அமெரிக்கா நாட்டில் வாழும் மனிதநேயம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி- அபிராமி கைலாசபிள்ளை கருங்கற்தேரைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்தக் கருங்கற்தேர் 21 அடி உயரத்தில் பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வகையில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த தேருக்கு மேலாகச் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அருவுருவத் திருவான சிவலிங்கப் பெருமான் மற்றும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசக நாயனார் ஆகியோரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சிவலிங்கப் பெருமான் மீது காட்சியளிக்கும் நாகபாம்பு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. கருங்கற் தேரின் கீழே நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

கருங்கத்தேர் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவாசக அரண்மனையின் மூலவராகத் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவதெட்சணா மூர்த்திக்கு விசேட தீபாரதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் திருவாசக அரண்மனை வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருவாசக அரண்மனைச் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன் போது திருவாசக அரண்மனையை நிர்மாணித்த கலைஞர்கள் மற்றும் திருவாசக அரண்மனை உருவாகுவதற்குக் காரணமான கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டதுடன்,திருவாசக அரண்மனைத் திறப்பு விழா சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியுரையும், கம்பவாரிதி இ. ஜெயராஜின் சிறப்புரையும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருவாசகம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர் தி. பாலச்சந்தர் தேசிகரின் திருவாசக இசைவிருந்து சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவாசக அரண்மனை மூலம் மீண்டும் ஈழத்தில் சிவவழிபாடு மேலோங்குவதற்கும், சைவசமய மறுமலர்ச்சிக்கும் வித்திடும் என்பதில் ஐயமில்லை.

(செய்திக்கட்டுரையாக்கம் மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-)