பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க ‘விநாயகர் சதுர்த்தி’: சிறப்புக் கட்டுரை

ஆவணி மாதம் வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி தினமே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இது.

விநாயகர் தோன்றிய விசித்திரக் கதை

பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன் தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்.

அப்போது சிவன் வர காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள்.

நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும்.

நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். இப்படி விசித்திரமாக நிகழ்ந்த ஒன்றுதான் விநாயகர் அவதாரம்.

விநாயகர் சதுர்த்தி விரதமிருப்பது எப்படி?

அன்றையதினம் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜையறையில் கோலமிட்டு தலைவாழை இலை ஒன்றைப் போடுங்கள். இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்கட்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வையுங்கள்.

அறும்புல், எருக்கம்பூ போன்றவற்றை சாத்துங்கள். சந்தனம், குங்குமம் இடுங்கள். விளக்கேற்றி வைத்து, ஊதுபத்தியைக் கமழச் செய்யுங்கள்.

உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொன்னபடியே வசதிக்கு ஏற்ற நிவேதனப் பலகாரங்களைச் செய்யுங்கள். பலகாரங்கள் தவிர, அவல், பொரி, கடலை, தேங்காய், விளாம்பழம், நாவற்பழம் போன்றவையும் விநாயகருக்கு விருப்பமானவை தான்.

நல்ல நேரத்தில் பிள்ளையாருக்குத் தூப, தீபம் காட்டித் தெரிந்த துதிகளைச் சொல்லிப் பூஜித்து நிவேதனம் செய்யுங்கள்.

(ஆதவன்-)