யாழில் 13 மாணவர்களுக்காக இடம்பெற்ற பாடசாலை விளையாட்டு விழா: ஓர் சிறப்புப் பார்வை (Videos)

யாழ்.வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 13 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் நேற்றுப் புதன்கிழமை(27-02-2019) பிற்பகல்-01.30 மணி முதல் வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விளையாட்டு விழாவுக்கு சுவிஸில் இயங்கி வரும் லங்கா சைல்ட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததுடன் ஊடக அனுசரணையை ‘Jaffna Vision’ நிறுவனமும் வழங்கியிருந்தது.

பல வருடங்கள் பழமை வாய்ந்த இந்தப் பாடசாலை சொந்தவிடத்தில் இயங்கிய போது சுமார்-417 மாணவர்களுடன் இயங்கி வந்தது. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக கடந்த-1988 ஆம் ஆண்டு முதல் இந்தப் பாடசாலை அறவே இயங்காதிருந்தது.

இந்நிலையில் கடந்த-2017 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலையின் அதிபராக ந.இரவீந்திரன் நியமிக்கப்பட்டு பாடசாலையைத் தற்காலிகமானதொரு இடத்தில் மீள இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும்,மாணவர்கள் இன்மையால் அவ்வருடத்தில் பாடசாலையை மீள இயக்க முடியவில்லை.

கடந்த- 2017 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் இந்தப் பாடசாலை முன்னர் இயங்கி வந்த வயாவிளான் உத்தரிய மாதா தேவாலயத்தை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன.

எனினும், யுத்தம் காரணமாகப் பாடசாலை கடுமையாகச் சேதமடைந்த காரணத்தால் சொந்தவிடத்தில் மீள இயக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த-2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் உரும்பிராயில் இயங்கி வந்த ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் இந்தப் பாடசாலை முதலாம் தரத்தை மட்டும் கொண்டதாக இயங்க ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் வயாவிளான் மத்திய கல்லூரியின் ஒரு பகுதியில் இந்தப் பாடசாலை தற்காலிகமாக இயங்க ஆரம்பித்தது.

இந்த வருடம் இரண்டாம் தரமும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது 13 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சுமார்- 30 வருட காலத்திற்குப் பின்னர் நேற்றைய தினம் இந்தப் பாடசாலையின் விளையாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.

அதிபர் ந.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா. ஆனந்தகுமார் பிரதம விருந்தினராகவும், வயாவிளான் றோ.க. த.க பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் ஏ.எம். இராஜேந்திரம் சிறப்பு விருந்தினராகவும், ஜே-244 வயாவிளான் கிழக்கு கிராம அலுவலர் ப. மயூரன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆரம்பப் பிரிவு மாணவ, மாணவிகளின் 50 மீற்றர் ஓட்டம், 75 மீற்றர் ஒட்டம், தாரா நடை, முயல் பாய்ச்சல், நிறம் தெரிதல், பலூன் உடைத்தல், கணக்குப் புதிர், உருவம் பொருத்துதல், பழம் பொறுக்குதல், பிராணிகள் அஞ்சல், பந்துப் பரிமாற்றம், நீர் நிரப்புதல், கிழங்கு பொறுக்குதல், உணவு சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும், பெற்றோர்களுக்கான பந்துப் பரிமாற்றம் என்பனவும் நடைபெற்றன.

13 மாணவ,மாணவிகளுக்காக மாத்திரம் இந்த விளையாட்டு விழா இடம்பெற்ற போதிலும் மாணவ, மாணவிகள் சளைக்காது தமது திறமைகளை வெளிப்படுத்தினர். மகிழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்குப் பெறுமதியான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இடம்பெயர்ந்த நிலையில் பெளதீக வளங்களின்றி, குறைந்த மாணவர்களுடன் இந்தப் பாடசாலை இயங்கி வருகின்ற போதும் மேற்படி பாடசாலை அதிபர் ந. இரவீந்திரனின் பெருமுயற்சியினால் நீண்ட காலத்தின் பின்னர் நேற்றைய தினம் விளையாட்டு விழா இடம்பெற்றிருந்தது.

இந்த விளையாட்டு விழா சிறப்புற இடம்பெறுவதற்குப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,வயாவிளான் மத்திய கல்லூரி சாரண மாணவர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பூரண ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதேவேளை, மேற்படி பாடசாலையின் அதிபர் ந.இரவீந்திரன் நீண்டகாலத்தின் பின் இடம்பெற்ற இந்தப் பாடசாலையின் விளையாட்டு விழா தொடர்பாக எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளிகள்:- செ.ரவிசாந்-}