தேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)

ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான யாழ்.ஏழாலைக் கிராமத்தின் முதன்மை வழிபாட்டுத் தெய்வமாக விளங்கும் ஏழாலைஅத்தியடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(17-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காலை-06.30 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகளுடன் தேர்த் திருவிழாக் கிரியைகள் ஆரம்பமானது.

வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் அலங்கார நாயகனாக அழகிய பீடத்தில் உள்வீதியில் மெல்ல மெல்ல அசைந்தாடி வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணிக்கு விநாயகப் பெருமான் சித்திரத் தேரில் ஆரோகணித்தார். சிதறுதேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்- 10.30 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமாகியது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும்,பெண் அடியவர்கள் மறுபுறமும் சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர்.

முற்பகல்-1130 மணியளவில் சித்திரத்தேர் மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

தொடர்ந்து பிற்பகல்-12.30 மணியளவில் விநாயகப் பெருமான் சித்திரத் தேரிலிருந்து அவரோகணித்தார்.

ஊரெழுவைச் சேர்ந்த சிவாகமபூஷணம்,கிரியாசாகரம் சிவஸ்ரீ தி. சோமநாதக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த் திருவிழாக் கிரியைகளைச் சிறப்பாக ஆற்றினர்.

ஏழாலை இந்து இளைஞர் சபையினர் மற்றும் கிராமத்து தொண்டர்கள் தேர்த் திருவிழா சிறப்புற நடைபெறுவதற்கான பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர்.

இன்றைய தேர்த் திருவிழாவில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்களின் நன்மை கருதி ஆலயச் சூழலிலுள்ள தாகசாந்தி நிலையத்தில் பானங்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவத்தின் நிறைவுநாளான தீர்த்தோற்சவம் வைகாசி விசாகத் திருநாளான நாளை சனிக்கிழமை முற்பகல்- 10. 30 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளதுடன் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென இவ்வாலய பரம்பரை தர்மகர்த்தா முருகேசு பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

அவர் எமது செய்திச் சேவைக்கு மேலும் விசேடமாக கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாலயம் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பின்னர் நிர்வாகப் பிரச்சினைகளால் மூடப்பட்டிருந்த இவ்வாலயத்தை எனது தந்தையார் முருகேசு வாத்தியார் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் திறந்து பூசை வழிபாடுகள் ஆற்றி வந்தார்.

ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஆலயங்களில் முதன்மைத் தெய்வமாக ஏழாலை அத்தியடி விநாயகப் பெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்றார்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- ஏழாலையிலிருந்து செ.ரவிசாந்-}