இதயபூர்வமான நோன்புத் திருநாள் வாழ்த்துக்கள்

ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டுள்ளமையால் இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் இன்று புதன்கிழமை(05) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமழான் முஸ்லிம்களைப் பொறுத்தவரை முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது. ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம் மாதத்தில் நோன்பிருப்பர்.

ஒருமாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தகித்திருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.

இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாம் புனித நோன்பு வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பது முஸ்லிமான ஆண்,பெண் அகிய இருபாலாரின் கடமையாகும். ரமழான் என்ற அரபுச் சொல் பாவங்களை சுட்டெரித்தல் என்று பொருள் தருகிறது. எனவே, பாவவிடுதலை, விமோசனம் பெற இந்த நோன்புத் திருநாளை சுப சோபனம் கூறி வரவேற்போம்.

கடந்த ஏப்ரல் மாதம்-21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்தப்பட்ட ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் பல்வேறு வகைகளிலும் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டு வர நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். புனித நோன்புத் திருநாள் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்திடுவோம்.

இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

‘Jaffna Vision’ இணையத்தள நிர்வாகம்.