“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்

ஈழம் சினிமாப் படைப்பாளிகள், கலைஞர்கள், அபிமானிகள், ஆர்வலர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் ஒன்றினை ஈழத்தமிழ் இயக்குனரும் படைப்பாளியுமான ஞானதாஸ் காசிநாதர் விடுத்துள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது,

எங்கள் சினிமா முயற்சியின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு முழுநீளத் திரைப்படம் ஒரே தடவையில் அதிகமான நாடுகளில் (8), அதிகமான தியேட்டர்களில் (21), அதிகமான காட்சிகள் (53) திரையிடப்படுகிறது.

அது “சினம்கொள்” என்னும் திரைப்படம்.

இது உண்மையில் ஈழம் சினிமா முயற்சியில் அல்லது எமக்கான சினிமா முயற்சியில் உள்ள அல்லது அந்தக் கனவோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிற அனைவருக்குமான ஒரு புதிய திறவு (ஓப்பினிங்) என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அங்கொன்று இங்கொன்றாக ஏதோ ஒரு தியேட்டரில் ஒரே நாளில் ஒரு காட்சி இரு காட்சிகள் காட்டி எங்களுக்குள் நாங்களே பார்த்தும், இரசித்தும், புகழாரம் பாடியும் கடைசியில் போட்ட காசும் கிடைக்காமல், காட்டின காசு கூட கைகெட்டாமல் வெறும் கையோடு வீடு திரும்பும் நிலைமையை தகர்த்து பரந்து வாழும் எம் மக்களிடையே பாரிய அளவில் எம் படைப்புகளைக் கொண்டுப் போய்ச் சேர்க்கும் ஒரு புதிய வாசலைத் திறக்க முனைந்துள்ளது இந்த “சினம்கொள்” திரைப்படம்.

இந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என நீங்கள் முதலில் மனதார எண்ண வேண்டும்.

ஏனெனில் இந்த வெற்றியின் தொடர்சியாக நாளை உங்கள் படைப்புகளும் பரந்து வாழும் எம் மக்களிடையே பாரிய அளவில் சென்றடையும்.

பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டும். அதைக் கட்டத் துணிந்துள்ளது சினம்கொள்.

அந்த சினம்கொள் வெற்றி பெற்றால் உங்களுக்கான பாதை போடப்பட்டுள்ளது, உங்களுக்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது என்றுதான் அர்த்தம்.

எனக்குத் தெரியும், உங்கள் அனைவராலும் சினம்கொள் திரைப்படத்தை விடவும் சிறந்த படத்தை உருவாக்க முடியும். நீங்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் வெல்லக் கூடிய திறமைசாலிகள். ஆனால் நீங்கள் படைக்கப் போகும் மகத்துவமான படைப்புகளுக்கான வாசலை சினம்கொள் தனது சொந்த ரிஸ்க்கில் திறந்து வைக்க முன்வந்துள்ளது என்பதை மதி கொண்டு கவனியுங்கள்.

உங்கள் படைப்புகளை நீங்கள் இலகுவாக வெற்றிபெறச் செய்வதற்கான ஒரு புதிய செல்நெறியைத் திறந்து வைக்க முன்வந்துள்ளது இந்தச் சினம்கொள்.

இது உங்களுக்கான பாதை. இது உங்களுக்கான வாசல். அதை முடிந்தவரை அகலமானதாகவும் விஸ்தாரம் மிக்கதாகவும் ஆக்க வேண்டிய தேவை உங்களுக்குள்ளது. ஏனெனில் அப்பொழுதுதான் உங்கள் படைப்புகள நாளை எம் மக்களை இலகுவாகச் சென்றடையும்.

நம்புங்கள் இந்த சினம்கொள் ஈழம் சினிமா பற்றிய நம்பிக்கையயும் ஈர்ப்பையும் பார்ப்போர் மத்தியில் உருவாக்கும். அந்த நம்பிக்கையில் நாளை அந்த மக்கள் உங்கள் படைப்புகளையும் பார்க்க வருவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த சினம்கொள் திரைப்படத்தை எவ்வளவு அதிகமான மக்கள் பார்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான மக்கள் உங்கள் படைப்புகளைப் பார்க்கப் படையெடுப்பர்.

ஆகவே சினம்கொள் அதிகமான மக்களைச் சென்றடைய நீங்கள் ஒவ்வொருவரும் கைகொடுங்கள். ஏனெனில் ஒரு ஈழம் சினிமாவின் வெற்றிதான் அடுத்த ஈழம் சினிமாவின் வெற்றிக்கான படிக்கல். ஒன்றை வெற்றிப் பெறச் செய்வதன் மூலமே அடுத்ததை வெற்றிப்பெறச் செய்ய முடியும். உங்களுக்கு முன்னம் உள்ளதை வெற்றிப் பெறச் செய்வதன் மூலமே உங்கள் படைப்படைப்பை நீங்கள் வெற்றி பெறச் செய்யமுடியும்.

“மற்றவன் தோற்றாத்தான் நான் வெற்றி பெற முடியும்!” என்ற பாழான மனோபாவத்தை இனியாவது விட்டெறிந்து…

வாருங்கள் “சினம்கொள்” என்ற ஈழம் சினிமாவை வெற்றிச் செய்வோம்.

“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்!