சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு: கொரோனாவுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேசப் புகழ் மிக்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்.,16) நடை திறக்கப்படுகிறது.

ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுமென திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளை (அக்.,17) காலை 5 மணி முதல் 21ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு வருபவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும், பம்பையில் பக்தர்கள் குளிக்க கூடாது, பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.