இன்று உலக உணவு தினம்: எல்லோருக்கும் கிடைக்க செய்வோம்

வருடா வருடம் ஐப்பசி மாதம் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாப்படுகிறது. விவசாயிகளுக்கும், உணவு உற்பத்தி செய்பவர்கள் தொடங்கி ஏற்றுமதி, இறக்குமதி என வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு FAO (Food and Agriculture Organization) இந்த நாளை உருவாக்கியது.

உணவு இறையாண்மை தொடர்பில் சூழலியல் எழுத்தாளரும், இயற்கை வேளாண் வல்லுநருமாகிய பாமயன் பின்வருமாறு கூறுகிறார், “தேசங்களின் இறையாண்மை பற்றிப் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். ஆனால் உணவு இறையாண்மை பற்றி, நாம் யாரும் கவலைப்படுவதில்லை. உணவு உறுதிப்பாடு (Food security) என்பது வேறு, உணவு இறையாண்மை (Food Sovereignty) என்பது வேறு. உணவு உறுதிப்பாட்டைப் பொறுத்த அளவில், ஏதாவது ஓர் உணவைப் பெறுவதற்கான உறுதிப்பாடு என்பதுடன் முடிந்துவிடுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்தும்கூட உணவை இறக்குமதி செய்து கொடுத்துவிட முடியும். ஆனால், உணவு இறையாண்மை என்பது உணவை விளைவிக்கும் நிலத்துக்கான உறுதிப்பாடு, அதற்கான நீருக்கான உறுதிப்பாடு, விதை போன்ற மரபை ஈனும் வளத்துக்கான உறுதிப்பாடு, அத்துடன் உணவுக் கொள்கைகளில் உழவர்களின் பங்கேற்புக்கான உறுதிப்பாடு ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடக் கூடாது.”

“என்ன உணவை நாம் உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிலை இப்போது இல்லை. யாரோ சிலர் நமக்கான உணவை முடிவு செய்து அனுப்புகின்றனர். நம் ஊருக்கு அருகில் விளையும் ஊட்டம்மிக்க குரக்கனையும், தினை, சாமையையும் நாம் உண்பதைத் தடுக்கும் இந்த மறைமுகச் சூதாட்டத்தை என்னவென்பது? எனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதையும் எந்த வகையான உணவை நான் உண்ண வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் ஆற்றல் ஒருவருக்கு இருக்குமேயானால், அதுதான் உணவு இறையாண்மை.”

அந்த வகையில் இந்த உணவு நாள் என்பது கட்டாயம் அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். வரைமுறையின்றி மாறிவரும் உணவுப் பழக்கம் , இதனால் மாறும் வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்ட இது ஒரு பொன்னான நாள் என்கின்றனர். எனவே நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தை ஒழுக்கத்துடன் கடைபிடிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

உணவை வீண் செய்யாதீர்கள் :

ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருங்கள். வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமன்றி உணவகங்கள், விசேஷ வீடுகள் என பல இடங்களில் உணவு தேவையில்லாமல் அதிகமாக சமைத்து வீண் செய்கின்றனர் என சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. எனவே அந்த உணவுகளை பசியின்றி தவிக்கும் மக்களுக்கு தானமாக வழங்கவும் அறிவுறுத்துகின்றனர். எனவே நீங்களும் முடிந்தவரை உணவை வீண் செய்வதை தவிர்க்கலாம்.

பருவகால உணவு :

பருவகால காய்கறிகள், பழங்களை சாப்பிடத் துவங்குங்கள். ஏனெனில் அந்தந்த பருவத்தில் விளையும் காய்கறி , பழங்களைதான் உடலும் அதற்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும். சிலர் பருவம் அல்லாத நேரத்திலும் சில காய்கறிகளை விரும்புவதால் அதை செயற்கை முறையில் விளைய வைக்கின்றனர். இது இயற்கை வளத்திற்கு கேடுவிளைவிக்கும் செயல் என்பதால் தவிர்த்தல் நல்லது.

இயற்கைஉணவு :

சந்தையில் பல வகையான காய்கறிகள், பழங்களை பார்க்கிறோம் அவை பளபளப்பாக இருக்கவும், பெரிய பெரிய அளவில் இருக்கவும் கெமிக்கல் கலப்படங்கள் செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட கருவிலேயே அதன் இயற்கை உற்பத்தியை அழிப்பதாக உள்ளது. சில காய்கறிகள் பதப்படுத்தப்படுகின்றன. எனவே இன்று இயற்கை விவசாய காய்கறிகளும் சந்தைக்கு வந்துவிட்டன. இயற்கை உரங்கள் பயன்படுத்தி நாட்டுக் காய்கறிகளை தோட்டத்தில் விவசாயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கி சமைப்பதால் உணவும் ருசிக்கும். உங்கள் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

வீட்டு உணவு :

இன்று உணவை வாங்கி சாப்பிடும் முறை என்பது எளிதாகிவிட்டது. அதன் சந்தை பெருக்கமும் அதிகரித்துவிட்டதால் உணவில் ஒரு கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். இவை ஆரோக்கியமானதா என உங்களை நீங்களே திரும்பிக் கேட்டால் மனசாட்சி பதில் சொல்லும். எனவே வீட்டில் உங்கள் கைப்பட சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். மற்றவை சுவை மட்டுமே அளிக்கும். ஆரோக்கியம் அல்ல.

இந்த காலத்தில் மட்டும் மீன்களை விட்டு விடுங்கள் :

மீன் ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அது நல்ல சுவை நிறைந்த உணவு. ஆனால் சிலர் மழைப்பருவத்தின் போதும் மீன் சாப்பிட விரும்புவார்கள். இந்த சமயத்தில் மீனுக்கு ஏகபோக டிமாண்ட் இருக்கும். இதை பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்ப்பவர்களும் சிலர் உண்டு. ஏன் அந்த டிமாண்ட் என்றால் அந்த சமயத்தில்தான் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். ஆனால் சிலர் இந்த கரிசனமெல்லாம் பார்க்காமல் லாபம் ஈட்ட அவற்றை விற்பனை செய்வார்கள். இதனால் க்ரீன்பீஸின் கூற்றுப்படி 80 சதவீத மீன்களின் தொகை (fish population) விளிம்பில் உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்திற்காக சற்று கருணை காட்டுங்கள். சரியான பருவகாலம் வரும் வரை காத்திருந்து வாங்குங்கள். காத்திருந்து சுவைத்தலும் அலாதி இன்பம்தான்.