மோடிக்கு விக்கினேஸ்வரன் கடிதம்

இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள 15 பில்லியன் பண உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்த மத வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட கூடாதென்ற உத்தரவாதத்தை பெற வேண்டுமென, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

இந்திய பிரதமருக்கு விக்னேஸ்வரன் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்-

மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அறிவது,

அண்மையில் எமது நாட்டின் பிரதமரிடம் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் செயலானது எமது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் கூட்டியுள்ளது.

பதின்மூன்றவது திருத்தச்சட்டத்தின் குறைபாடுகளை நீங்கள் நன்கறிவீர்கள் என்று நம்புகின்றேன். அத்துடன் இலங்கை இந்திய உடன்பாட்டையும் பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தையும் நீங்கள் வெவ்வேறாகப் பகுத்துப் பார்த்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன். அண்மையில் மதிப்பிற்குரிய திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய இந்திய ஃபோரத்தால் நடாத்தப்பட்ட “சூம்” வழிக் கலந்துரையாடலின் போது 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய உடன்பாட்டின் முழுமையான நடைமுறைப்படுத்தலானது எம் இருதரப்பாருக்கும் நன்மை பயக்கும் என்று கூறியிருந்தேன். என்னுடைய தமிழ்ப் பேச்சின் ஆங்கில மொழியாக்கத்தின் பிரதியொன்றை இத்துடன் இணைத்து அனுப்புகின்றேன்.

ஒரு சில விடயங்கள் மாண்புமிகு உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெற வேண்டும்.

1. அண்மையில் இந்தியாவின் கொடையாகக் கொடுக்க உடன்பட்ட தொகையான 15 மில்லியன் டொலர் தொகையை இரு நாடுகளுக்கிடையிலான பௌத்த நட்புறவை மேம்படுத்தவும், பௌத்த சமய வணக்கஸ்தலங்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் மற்றும் தொல்பொருளியல் சம்பந்தமான கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முனையும் போது இலங்கையின் வடகிழக்கு தமிழரின் தாயகப் பிரதேசத்தில் அத் தொகையின் நலனைப் பாவிக்கக் கூடாதென்ற ஒரு உத்தரவாதத்தை இலங்கைப் பிரதமர் மதிப்பிற்குரிய மகிந்த இராஜபக்சவிடம் இருந்து பெற்றுக் கொள்வது உசிதமானது.

2. மேலும் இருதரப்பு ஆயுதமேந்திய படைகளின் கூட்டை வலுப்படுத்த வழங்கப்படும் உதவிகள் மற்றும் பயிற்சிகள் இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மதிப்பிற்குரிய மகிந்த இராஜபக்சவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.