படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு தமிழர் தாயகத்தில் பரவலாக அஞ்சலி (Photos)

துப்பாக்கிதாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று 19.10.2020 திங்கட்கிழமை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய தமிழர் தாயக பிரதேசங்களில் அனுட்டிக்கப்பட்டன.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முல்லைத்தீவு மாவட்ட உறவுகள் நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து அண்மையில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் 1340 நாட்களைக் கடந்து தமது பிள்ளைகளை மீட்க போராடிக் கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஊடகர் நிமலராஜனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஊடகவியலாளர்களாலும் நிமலராஜனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலும் சிரேஸ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, 20 சிட்டிகளில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களும் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இன்று பரவலாக இடம்பெற்ற நினைவேந்தல்களின் போது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டதுடன், தமிழ் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்கள், தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தமது கடமையினை முன்னெடுப்பதற்கான சூழ்நிலையினை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலமான கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு இராணுவ காவலரனுக்கு அருகிலுள்ள அவரது வீட்டில் வைத்து அதுவும் ஊரடங்கு நேரத்தில் யாழ்.குடாநாட்டின் முக்கிய ஊடகவியலாளர் நிமலராஜன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட வேளையில் கூட தான் பணியாற்றிக் கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக் கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார் என்பதுடன், அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன்போது படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் பி.பி.சி தமிழோசை, அதன் சிங்கள சேவையான சந்தேசிய உள்ளிட்ட வானொலிகள், நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட தமிழ் சிங்கள வார இதழ்களென தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் அவர் பணியாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.