அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகிறார் கமலா ஹரிஸ்

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகும் முதல் கறுப்பின மற்றும் ஆசிய – அமெரிக்க பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ்.

55 வயதாகும் கமலா ஹரிஸின் தாய் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

கமலா ஹரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரமாகும்.

கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலராவார்.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்ற கமலா ஹரிஸ், தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

2003 ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அரசாங்க தலைமை சட்ட அதிகாரியானார்.

அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவின் அரசாங்க தலைமை சட்ட அதிகாரியாக அவர் பதவி வகித்தார்.

மேலும் கலிபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் கறுப்பின அரசாங்க தலைமை சட்ட அதிகாரி என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இரு முறை அரசாங்க தலைமை சட்ட அதிகாரியாக இருந்த கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி போட்டியில் வென்றதன் மூலம் 2024ஆண்டுக்குள் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களும் அவருக்கு உண்டு.