காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதில் பெண்களின் பங்கு

கடந்த ஐம்பது ஆண்டுகளில் நமது வாழ்முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மனிதரின் நாளாந்தச் செயற்பாடுகள் இந்த உயிர் சூழல் தொகுதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்த மாற்றங்களின் விளைவுகளில் ஒன்றாகவே கோவிட் நோயின் தீவிர பரம்பலையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. உயிரினப் பல்வகைமை இழப்பு காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை ஒவ்வொன்றாகச் சந்தித்து வருகிறோம். இவற்றுள் காலநிலை நெருக்கடி (Climate Emrgency) நாம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரும் சவாலாக உள்ளது.

சென்ற ஆண்டில் உலகம் முழுவதும் காலநிலை நெருக்கடிநிலைக்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பெருநகரங்களில் இளையோர் ஒரேநேரத்தில் “கிளைமத்தோன்” அலையாக அணிதிரண்டனர். இலங்கையில் இருந்து முதன்முறையாக யாழ்ப்பாண நகரமே இந்த மாற்றத்திற்கான செயல்முனைவில் தன்னை இணைந்துகொண்டது. அதன் விளைவாக நமது இளைஞர்களிடையே காலநிலை நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வும் சூழல் பற்றிய அக்கறையும் பெருமளவில் அதிகரித்துள்ளன. குறிப்பாக நிலைபேறான உணவு தொகுதியை நம் மண்ணில் உருவாக்குவது பற்றி நிறையப் பேசினோம்; செயற்படுத்தினோம். எவ்வாறான சிக்கல்களை எதிர் கொள்வோம் என்று நினைத்தோமோ அத்தனையும் இன்று கண்முன்னே நேரில் காண்கிறோம்.

காலநிலை மாற்றத்தின் ஆபத்துக்களை அதிகமாக எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. தாழ்வான நிலப்பரப்புகளைக் கொண்ட வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பேரழின் விளிம்பில் இப்போது உள்ளன எனலாம். பருவமழை பொய்த்துப் போதல், திடீர் வெள்ளப்பெருக்கு, கடல்நீர் உட்புகல், நிலத்தடி நீர் உவராக மாறுதல் போன்ற நிகழ்வுகள் இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இனியும் “காலம் இருக்கிறது” என்றோ “வேறு வேலை இருக்கிறது” என்றோ ஒதுங்கி இருந்தால் பேரழிவுகளையே நம் மக்கள் சந்திக்க வேண்டி வரும். இயற்கை தொடர்பாகச் சிந்திக்கச், செயற்பட இளைஞர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்ட வேண்டியமை இன்று நம் முன்னால் உள்ள பெரும்பணியாகும்.

நிலைபேறான இயற்கைவழி வாழ்வியல் தொடர்பான சிந்தனையைத் தூண்டவும், செயல்முனைவுகளை ஊக்குவிக்கவும் “கிளைமத்தோன் யாழ்ப்பாணம்” பெருநிகழ்வு ஒரு நல்ல சந்தர்ப்பத்தினை உருவாக்குகின்றது. இந்த ஆண்டு கார்த்திகை மாத நடுப்பகுதியில் (13, 14, 15 ஆம் திகதிகளில்) இணையவழியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் புத்தாக்கங்களையும், மாற்றத்திற்கான செயற்திட்டங்களையும் சமர்ப்பிக்கவுள்ளவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். சென்ற ஆண்டு நிகழ்விலும் கணிசமான அளவு பெண்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று நம் சமூகத்தில் பொலித்தீன்/பிளாஸ்ரிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள், பொது இடங்களில் கழிவுகளை அகற்றும் முயற்சிகள், பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வினை உருவாக்கும் செயல்முனைவுகள் எனச் சகல பணிகளிலும் பெண் செயற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருவதை நாம் அவதானிக்க முடிகிறது. பெண்களை முன்னிலைத் தலைவர்களாகக் கொண்ட சமூக மாற்றத்திற்கான இளையோர் அமைப்புக்கள் பலவும் உருவாகிவருகின்றமை பெருநம்பிக்கை தருகின்ற மாற்றமாகும். இதைவிட சென்ற ஆண்டில் இடம்பெற்ற “கிளைமத்தோன் யாழ்ப்பாணம்” பெருநிகழ்வில் வல்லமை, பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக காலநிலை நெருக்கடிநிலை தொடர்பான விடயங்களை மக்கள் மனங்களில் ஆழப்பதியும் வண்ணம் கொண்டுசென்று சேர்த்தனர்.

இவ்வருடமும் கிளைமத்தோன் பெருநிகழ்வின் ஒரு அங்கமாக எதிர்வரும் கார்த்திகை14 ஆம் திகதி பி.ப 4 மணி முதல் இணையவழியில் இடம்பெறவுள்ள ‘பண்பாட்டு மாலை’ நிகழ்வில் பல்வேறு ஆற்றுகைச் செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், இளம் செயற்பாட்டாளர்கள் குறிப்பாகப் பெண்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

உலக அளவில் காலநிலை நெருக்கடிக்கெதிராக மக்களையும் அரசுகளையும் செயற்படத்தூண்டும் செயற்பாட்டாளர்களில் முதன்மையானவர்களாகப் பெண்களே விளங்குகின்றனர். கிரீட்டா துன்பேர்க் என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த பதின்மவயதுப் பெண் மிகத்துணிச்சலாக மாற்றத்துக்காகப் பேசுகிறார். செயற்படத் தயங்கும் உலகத் தலைவர்களையும்காலநிலை மாற்றத்திற்குத் துணைபோகும் பெருவணிக நிறுவனங்களையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அவரது துணிச்சல், திறமை நம் பெண்களுக்கும் குறிப்பாக இளையோருக்கும் அவசியமானது. எந்தப் பெரிய சக்தி எதிராக இருந்தாலும் இளையோரும் பெண்களும் நினைத்தால் மாற்றம் சாத்தியமே என்ற நம்பிக்கையை அவர் நம் எல்லோரினதும் மனங்களில் விதைக்கிறார்.

மேற்குலகில் கிறீட்டா போன்று ஆபிரிக்காவிலும் துணிச்சலான பெண் செயற்பாட்டாளர்கள் அநேகர் உள்ளனர். கென்ய நாட்டுப் சூழலியற் செயற்பாட்டாளரான வஞ்சிரா மாத்தாய் அவர்கள் தனித்துவமானவர். உலக அளவில் செல்வாக்கு மிக்க நூறு ஆபிரிக்கப் பெண்களில் ஒருவராக வஞ்சிரா விளங்குகின்றார். பசுமைப் பட்டி இயக்கத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியதன் மூலம் நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாய் அவர்களின் மகளே வஞ்சிரா ஆவார்.

நவம்பர் 15 ஆம் திகதி காலை 10 மணிக்கு இணையவழியில் நடைபெறவுள்ள சிறப்புக் கலந்தாய்வில் பெருமதிப்புக்குரிய கென்ய நாட்டுச் சூழலியற் செயற்பாட்டாளரான வஞ்சிரா மாத்தாய் அவர்கள் கலந்துகொண்டு பேசவிருப்பது நமது பணிகளுக்கு ஒரு உலகளாவிய கெளரவத்தினைப் பெற்றுத் தருவதாக அமைகிறது. நிகழ்வில் Zoom செயலி ஊடாக இணைந்துகொள்ள Meeting ID – 817 5484 7355. மேலும் விவரங்களை அறிய 0764658482 என்ற அலைபேசி இலக்கம் மற்றும் md@suvadi.org எனும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்பு கொள்ளுங்கள். இந் நிகழ்வில் இளையோர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிப்பதன் மூலமே காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள நாமெல்லோரும் ஒன்றிணைந்திருப்பதை வெளிக்கொண்டுவரலாம்.

“இயற்கைவழி வாழ்வுக்கு திரும்புவோம்; இளையோர் நாம் இயல்பாக வாழ்வோம்”

-செல்வி ஸ்ராலினி இராசேந்திரம், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்,
கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020

இந்தக் கட்டுரையாளர் ஓர் இளம் தொழில்முனைவர் ஆவார். யாழ் மாவட்டச் சிறுதொழில் முயற்சியாளர் சங்கத்தின் முன்னைநாள் தலைவராகவும் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இயற்கைவழி இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராகிய இவர் ‘கிளைமத்தோன் நிகழ்வு’ ஒழுங்கமைப்புக்கான பணிகளையும் மேற்கொள்கிறார். கட்டுரையாளரை 0779866409 என்ற அலைபேசி இலக்கம் மூலமாகவும் stali91@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ளலாம்.