இணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)

காலநிலை மாற்றம் தொடர்பில் இளையோர் ஒன்றிணையும் சர்வதேச நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் இரண்டாவது வருடமாக 13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இணைய வழியில் திருக்குறள் மற்றும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகியது.

இம்முறை Covid – 19 பரவல் காரணமாக முற்றுமுழுதாக இணையவெளியூடாகவே நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கிளைமத்தோன் நிகழ்வு தொடர்பிலான அறிமுகவுரையினை நிகழ்வு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நிவேதா சிவராஜா (செயன்முறை வழிகாட்டி – யாழ் பல்கலைக்கழகம்) அவர்களால் வழங்கப்பட்டது.

யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், கலாநிதி எதிர்வீரசிங்கம் ( கல்வியாளர் , ஆய்வாளர்), திரு சாண் நந்தகுமார் ( ITEE Foundation தலைவர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சூழலியல் தொடர்பாடல்துறையினை சார்ந்த தகைசார் பேராசிரியர் சிறீஸ்கந்தராசா அவர்கள் காலநிலை நெருக்கடியினை உரையாடலும் எதிர்கொள்ளலும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியமை சிறப்பான அம்சமாகும்.

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள 150 கும் மேற்பட்ட பெரு நகரங்களில் இளையோர்கள் ஒரே காலப்பகுதியில் ஒன்றினையும் பெருநிகழ்வான கிளைமத்தோன் இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்திலும் இம்முறையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று 14.11.2020 காலை 8.30 மணிக்கு சூழலியலாளர் திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களின் சிறப்புரையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து மாற்றத்திற்கான இளையோர்கள் தங்கள் கருத்திட்டங்களை முன்வைக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. மாலை நான்கு மணிக்கு பண்பாட்டு மாலை நிகழ்வு இடம்பெறுகின்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை 15.11.2020 நிகழ்வுகளில் 2020 ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 100 ஆபிரிக்க பெண்களில் ஒருவரான கென்ய நாட்டு சூழலியல் செயற்பாட்டாளரான வஞ்சிரா மாத்தாய் அவர்களும் நெதர்லாந்து வாகனிங்கென் பல்கலைக்கழகத்தில் ‘சமூக நிலைபேறும் – மாற்றத்துக்கான கற்றலும்’ என்ற துறைக்குரிய UNESCO சிறப்பு பேராசிரியராக கடமையாற்றும் திரு ஆர்யன் வால்ஸ் அவர்களும் 15.11.2020 (ஞாயிறு) காலை இடம்பெறும் கலந்தாய்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இக்கலந்தாய்வினை சுவீடன் விவசாய விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தை சேர்ந்த சூழலியல் தொடர்பாடல் துறையை சார்ந்த பேராசிரியர் நடராஜா சிறீஸ்கந்தராஜா அவர்கள் நெறிப்படுத்துகிறார்.

நாளை மாலை விருதுகள் மற்றும் பரிசில்கள் நலன்களுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடையவுள்ளன.

இந்நிகழ்வுகளில் ZOOM செயலி ஊடாக இணைந்து கொள்ள Meeting ID – 817 5484 7355 இனை பயன்படுத்த முடியும்.