கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

சர்வதேசத்தின் தலைசிறந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள டீயாகோ மரடோனா அண்மையில் தான் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்.

இதற்காக 8 நாட்கள் அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்நோயாளியாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக கடந்த 11-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மரடோனாவுக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்குள் அவர் உயிர்பிரிந்துவிட்டது. இந்த தகவலை மரடோனாவின் வழக்கறிஞர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைக்கு பிறகு மரடோனாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்து வந்திருக்கிறது.

இதன் காரணமாக அவரது உடல்நிலையை கண்காணிக்க அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை தரப்பில் இருந்து பிரத்யேக செவிலியர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகில் தனிக்கென தனி சாம்ராஜ்யம் கட்டி ஆண்ட மரடோனாவின் திடீர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பலரும் மரடோனா குறித்த நினைவுகளை, அவரது பெருமைகளை, திறமைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.