சுன்னாகம் பொதுநூலகத்தில் “எங்கட புத்தகங்கள்” புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாளை 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரை ‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சியும் விற்பனையும் சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற உள்ளது.

நூலகங்களினால் வாசிப்பு மாதமாகிய ஒக்டோபர் மாதத்தில் வருடம் தோறும் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் வரிசையில் இவ்வருடம் ‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் 7, 8, மற்றும் 9ஆம் திகதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும் கொரோனா சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்டது.

தற்போது குறித்த புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நாளை 30ஆம் திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதிவரை 8 தினங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சுன்னாகம் பொதுநூலக மேல் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

எங்கட புத்தகங்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஈழத்திலும் புலத்திலும் வாழும் 300 க்கும் அதிகமான எழுத்தாளர்களின் 500 க்கும் அதிகமான புத்தகங்களின் 3000 த்துக்கும் அதிகமான பிரதிகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நெருக்கடி இன்றி வாசகர்கள் புத்தகங்களை பார்த்து, வாசித்து கொள்வனவு செய்வற்கு ஏற்றவாறு கண்காட்சி 8 தினங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு, கண்காட்சி நடைபெறும் நேரம் சுகாதார நடைமுறைகளும் இறுக்கமாக பின்பற்றப்படும்.

தனியே நாவல்கள், கதைகள், கவிதைகள் என்றில்லாமல் வரலாறு, சட்டம், இலக்கியம், சமயம், அறிவியல், நாடகங்கள், ஓவியம், நூலகவியல் என பல்வேறுபட்ட துறைசார்ந்த புத்தகங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளதால் எல்லாத்தரப்பு வாசகர்களுக்கும் இந்தக் கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும். என ஏற்பாட்டாளர்கள் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.