யாழின் சில பகுதிகளில் விளக்கீட்டுக்கு தடை: இராணுவம், பொலிஸார் அடாவடி (Photos)

இந்துக்களின் தீபத் திருநாள் பண்டிகை நேற்று 29.11.2020 கொண்டாடப்பட்டது. அதற்கு பல்வேறு தடைகள் வடக்கில் விதிக்கப்பட்டன.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களில் விளக்கீடு நடத்தக்கூடாதென சுன்னாகம் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி ஜெயந்தவினால் ஆலய நிர்வாகத்தினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தடையானது சித்தார்த்தன் எம்.பியின் தலையீட்டை அடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு செய்ய முடியாது என்று கூறி ஆலய இளையவர்களினால் செய்யப்பட்ட விளக்கீடு ஏற்பாடுகளினை கால்களினால் தட்டி சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி அட்டகாசம் புரிந்தார்.

சம்பவ இடத்திற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று இளையவர்களுடன் பேசி மத நிகழ்வுகளை தடை செய்ய பொலிசாருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனக் கூறி தடையின்றி விளக்கீடு மேற்கொள்ளுமாறு கூறினார். டக்ளஸ் தேவானந்தாவும் பொலிஸ் பொறுப்பதிகாரியோடு பேசி விளக்கீட்டுக்கு அனுமதித்ததாகவும் தகவல். பின் தீப ஒளியில் அப்பிரதேசமே பிரகாசித்தது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலும் வழமை போல் இம்முறையும் விளக்கீடு நிகழ்வினை ஏற்பாடு செய்த மாணவர்களை கைது செய்வோம் என பொலிசார் மிரட்டியுள்ளனர். பொலிசாரின் நடவடிக்கைக்கு துணைவேந்தரும் ஆதரவாக இருந்ததாக மாணவர்களினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்கலையினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விளக்கேற்ற சென்ற விஞ்ஞான பீட மாணவனை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்தார். ஏன் கைது செய்தீர்கள்? இந்துக்களின் நிகழ்வு என தெரியாதா என பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது, அது தெரியும், மேலிட உத்தரவு என்றார். பின் வாக்குமூலம் பெறப்பட்ட பின் நேற்றிரவே மாணவன் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் விளக்கீட்டை குழப்பி அநாகரீகமாக நடந்து கொண்ட பூநகரி படைப்பிரிவின் பரந்தன் இராணுவத்தினர் வீட்டு வாசலில் கொளுத்தப்பட்ட விளக்குகளை தட்டி விழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

கார்த்திகை மாதம் என்றாலே தீப ஒளியைக் கண்டால் இராணுவத்துக்கும், பொலிஸாருக்கும் பதற்றத்துக்கு ஆளாகின்றார்கள்.

இந்துக்கள் வருடாந்தம் அனுட்டிக்கும் விளக்கீடு தொடர்பிலான அடிப்படை அறிவற்றவர்கள் யாழ்ப்பாணத்து பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகளாக பணி புரிகின்றனர் என்பது வேதனையானது. இந்துக்களின் மத சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பொலிஸ், இராணுவத்தினரின் தடைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.