வெள்ள நிவாரணம் வேண்டாம்: உரிய வடிகாலமைப்பு வசதிகளை செய்து தந்தாலே போதும்!- இளம் தொழில் முயற்சியாளர் ஸ்ராலினி (Video)

யாழ்ப்பாணத்தில் இளம் தொழில் முயற்சியாளராக வளர்ந்து வரும் ஸ்ராலினியின் இயற்கை பண்ணையானது வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பலவித மூலிகைகள், மரக்கறிகள், தாவரங்கள் மற்றும் ஆடுகள், தாராக்கள் என ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையினை உருவாக்கி இருந்தார்.

கடந்த வாரம் உருவான புரேவி புயலைத் தொடர்ந்து பலத்த மழைவீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவாகியது.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருகினால் கொக்குவில் பொற்பதி வீதியில் பிள்ளையார் கோவிலுக்கு பின் பக்கமாக உள்ள இவரது பண்ணை நீரில் மூழ்கியது.

நேற்று முன்தினம் பெய்த கடும் மழையினால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ராலினியிடம் பேசிய போது,

வருடாந்தம் பருவ மழையின் போது எமது பகுதியில் உரிய வடிகாலமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக மழை வெள்ளத்தினால் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு வருடமும் பிரதேச சபைக்கும், உரிய அதிகாரிகளுக்கும் இவ்விடயம் தொடர்பில் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை.

இவ்வருடம் புரவிப் புயலைத் தொடர்ந்து பதிவான கடுமையான மழை வீழ்ச்சியால் எனது பண்ணையையே இடம் நகர்த்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

நிலம் முழுவதுமே இரண்டடிக்கு மேல் நீரில் மூழ்கியுள்ளதால் மூலிகைத் தாவரங்கள் எல்லாம் அழிந்து போகும் நிலைக்கு வந்துள்ளன.

சிறகுகள் அமையத்தின் உதவியுடன் எனது ஆட்டுப் பண்ணையை நண்பர்களின் வீடுகளுக்கு இடம்மாற்றியுள்ளேன்.

எனது பண்ணை மாத்திரமல்ல இங்குள்ள பல வீடுகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. நந்தாவில் குளத்தை அண்டிய பல பகுதிகளில் உள்ள பல வீடுகளே நீரில் மூழ்கியுள்ளன.

இன்று என்னுடைய பண்ணை முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.

என்னைப்போல் கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மரக்கறி பயிர்ச்செய்கை என வாழ்வாதாரத்தை நம்பியுள்ள எத்தனையோ குடும்பங்கள் இந்த வெள்ளப்பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தயவு செய்து எனக்கு வெள்ள நிவாரணம் வேண்டாம். இனி வரும் காலங்களில் இங்கு வெள்ள இடர் ஏற்பாடாதவாறு உரிய வடிகாலமைப்பு வசதிகளை பிரதேச சபை மற்றும் பொறுப்பான அதிகாரிகள் செய்து தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.