இயற்கை விவசாய வாரம் 2021 இன்று ஆரம்பம்

2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 – 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து இயற்கைவழி வேளாண் அறிஞர்கள் வருகைதந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடாத்தினர். புதியவெளிச்சத்தின் அனுசரணையுடன் கருத்தரங்குகள் நடாத்தப்பட்ட இக்காலப்பகுதியானது இயற்கை விவசாய வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

கடந்த மூன்று வருட காலமாக இயற்கை விவசாய வாரத்தில் இயற்கைவழி இயக்கத்தினராலும் ஏனைய சூழலியல் அமைப்புகளாலும் பெரு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்படுவது வழமையாகும். இவ்வருடம் கோவிட் – 19 பெருந்தொற்றினைக் கருத்திற்கொண்டு இணையவழிச் சந்திப்புக்களையே பிரதானமாக ஒழுங்குசெய்யத் தீர்மானித்துள்ளோம்.

எட்டாம் ஆம் திகதி (வெள்ளி) மாலை நான்கு மணிக்கு “ஏரோவியம்: இயற்கைவழி வாழ்வியலுக்கான அழைப்பு” ஓவியக் கண்காட்சி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த ஓவியங்களை இயற்கைவழி இயக்கத்தின் முகநூற் பக்கத்திலும், இணையத்தளத்திலும் காணலாம்.

ஒன்பதாம் திகதி நூலக இணையத்தளத்தில் கிளைமத்தோன் செயற்திட்டத்தின் ஒருபகுதியாக உருவாகக்கப்பட்ட காலநிலை மாற்றம் பற்றிய வலைவாசல் மற்றும் “எழுதிரள்” எண்மிய நூலகம் ஆகியவற்றின் அறிமுகநிகழ்வு என்பன மாலை நான்கு மணிக்கு இடம்பெறும்.

பத்தாம் திகதி (ஞாயிறு) அன்று காலை 10:00 மணிமுதல் 12 மணிவரை “இயற்கைவழி நெல்லுற்பத்தி: சவால்களும் சாத்தியங்களும்” என்னும் தலைப்பிலான இணையவழி உரையாடல் இடம்பெறும். இதில் தமிழகத்தில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் இயற்கைவழி விவசாயிகள் கலந்துகொண்டு உரையாடவுள்ளார்கள்.

பதினோராம் திகதி (திங்கட்கிழமை) மாலை நான்கு மணிக்கு இயற்கைவழி செய்திமடல் வெளியீடும் அதையொட்டிய இணையவழி உரையாடலும் இடம்பெறவுள்ளது. இயற்கைவழி இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றிய செய்திகளைத் தாங்கிக் காலாண்டுச் செய்திமடலாக ‘இயற்கைவழி’ தொடந்தும் வெளிவரும்.

பன்னிரண்டாம் திகதி (செவ்வாய்க்கிழமை) மாலை நான்கு மணிக்கு பலாலி வீதியில் புதிய இடத்தில் ‘இயற்கைவழி அங்காடி’ மீள ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இயற்கைவழி வேளாண்மைக்குத் தேவையான கரைசல்கள், இயற்கை உரங்கள், பாரம்பரிய விதைகள், கன்றுகள் முதற்கொண்டு நஞ்சற்ற வேளாண் உற்பத்திகள் வரை சகலவற்றையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பதின்மூன்றாம் திகதி புதன்கிழமையன்று இயற்கைவழி இயக்கத்தின் கூட்டு வேளாண் முயற்சிகள் பற்றிய செயல்விளக்கங்களுடன் கூடிய இணையவழிப் பயில்களம் மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுத்தோட்டங்களில் இருந்து தேவையான உணவினை உற்பத்திசெய்யக்கூடிய வழிமுறைகள் பற்றியும் ஆராயப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகை நாளன்று மாலை நான்கு மணிக்கு பொங்கல் சிறப்புக் கலாச்சார நிகழ்வுகளுடன் ஏர்முனை சிறப்புப் பதிப்பாகிய “ஏரோவியம்” ஒவிய நூல் வெளியீடும் இடம்பெறும். கலாச்சார நிகழ்வுகளில் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் சிறப்புக் கவிஞர்கள் கலந்துகொள்ளும் கவியரங்கம் முதன்மை நிகழ்வாக அமையும்.

மேற்குறிப்பிட்ட சகல நிகழ்வுகளிலும் தரப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி சூம் செயலியூடாக இணைந்துகொள்ளலாம். மேலும் பல நிகழ்வுகள் இளம் இயற்கைவழி விவசாயிகளாலும், சூழலியற் செயற்பாட்டாளர்களாலும் வடமாகாணம் தழுவியரீதியில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளவும் இயற்கைவழி இயக்கத்தில் இணைந்து பயணிக்கவும் 021 222 5520 என்ற தொலைபேசியிலக்கமூடாக அல்லது அதே இலக்கத்தில் வட்சப் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

https://us02web.zoom.us/j/85479905197