வடக்கு உட்பட நாடு முழுவதும் மழை: குறைந்த காற்றழுத்த தாழ்வு சூறாவளியாக தீவிரமடைய வாய்ப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

மறு அறிவிப்பு வரும் வரை, இன்று முதல் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த கடல் பகுதிகளில் உள்ள நபர்கள் கடற்கரைக்குத் திரும்ப அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பகுதி இன்று தீவிரமடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திங்கள்கிழமைக்குள் இது சூறாவளியாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

அதன்படி, இடியுடன் கூடிய மழைக்காலங்களில் 70-80 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலை காணப்படும்.