யாஸ் புயல் எங்கே கரையை கடக்கிறது?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் இரு தினங்களுக்கு முன்பாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாஸ் என பெயரிடப்பட உள்ள இந்த புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், நாளை மறுநாள் கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு, புயல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகம், ஆந்திர கடலோரம், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.