கொரோனாவால் உயிரிழந்த அதிபரை அஞ்சலிக்க இணையத்தில் குவிந்த மாணவர்கள்: நெகிழ்ச்சிச் சம்பவம் (Video)

உலகை முடக்கியுள்ள கொரோனாப் பெருந்தொற்று பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் அவ்வாறு உயிரிழந்தோரின் இறுதி நிகழ்வுகளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே நிகழ்ந்து வருகின்றன.

இவ்வாறான சூழலில் ஓய்வுநிலை அதிபரும், சமாதான நீதவானுமான கலாபூஷணம் கனக.மகேந்திரா அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் தன் 75 ஆவது வயதில் திருகோணமலையில் காலமானார். அவருக்கான இறுதி மரியாதையை முறையாகச் செலுத்தமுடியாத அவரது பழைய மாணவர்களும் நண்பர்களும் கடந்த சனிக்கிழமை (05/06/2021) அன்று ZOOM – செயலி ஊடாக ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், உட்பட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.

திருகோணமலையிலுள்ள கனக.மகேந்திரா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற குடும்பத்தினரின் வழிபாட்டு நிகழ்வுகள் நேரடியாக இணைக்கப்பட்டதோடு பழைய மாணவர்கள் சார்பில் நினைவுப்பாடலொன்றும் வெளியிடப்பட்டது.

அவரது மாணவர்களான வேணுதன் மகேந்திரரட்ணம், துஷாயினி கிரிதரன், ஜூட் கண்ணன் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்த சுமார் 4 மணிநேரங்கள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடியிருந்து தங்கள் துயரைப் பகிர்ந்துகொண்டமை நெகிழ்ச்சியாக அமைந்தது.