இணையவழி நுண்நிதி தகமைச் சான்றிதழ் கற்கை நெறி யாழ். பல்கலையில் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படுகின்ற நுண்நிதி தகமைச் சான்றிதழ் (Diploma in Micro Finance) கற்கை நெறியின் நான்காம் அணியின் அறிமுக நிகழ்வு 19 ஆம் திகதி சனிக்கிழமை இணைய வழியாக நிகழ்நிலையில் இடம்பெற்றது.

திருநெல்வேலி, பால் பண்ணை வீதியில் அமைந்துள்ள வணிக முகாமைத்துவ பீடத்தில், பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இணைய வழி வாயிலாக இந்தக் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கற்கை நெறி இணைப்பாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி தர்ஷிகா பிரதீஸ், துறைத் தலைவர்கள் மற்றும் நிதி முகாமைத்துவத் துறை விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தற்கால கொரோனாப் பரவல் தடுப்பு செயலணியின் அறிவுறுத்தலுக்கமைவாக, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படுகின்ற ஒரு வருட காலத்தைக் கொண்ட நுண்நிதி தகமைச் சான்றிதழ் கற்கை நெறியின் நான்காம் அணியின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தும் இணைய வழியாக நிகழ் நிலையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.

நிதிசார் நிறுவனங்கள் , வங்கி ஊழியர்கள் உட்பட 27 பேர் இந்த அணியில் கல்வி பயில்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இணைய வழி வாயிலாக நடாத்தப்படும் முதலாவது நுண் நிதி தகமைச் சான்றிதழ் கற்கை நெறியின் முதல் அணி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.