வடமராட்சி மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி – வதிரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்கள், வதிரி அமெரிக்க மிசன் பாடசாலைக்கு அருகிலுள்ள ஐமூலை வளைவில் நிதானமிழந்து, மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகினர்.

சம்பவத்தில் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கண்ணா என அழைக்கப்படும் வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார். கண்டியை சேர்ந்த இவர், தற்போது வடமராட்சி, திக்கத்தில் திருமணம் முடித்து வாழ்கிறார். உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனை முடிவின் பின்னர், நாளை உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படும்.

இவருடன் பயணித்த பேரம்பலம் மயூரன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சையிக்கிளில் இருவரும் பயணித்தவேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.