சிறிய தேரில் எழுந்தருளினான் நல்லூர் அலங்கார நாயகன்: கொரோனாவால் களையிழந்த தேர்த் திருவிழா (Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அடியவர்களால் “அலங்காரக் கந்தன்” எனப் போற்றி வழிபடப்படுகின்ற ஈழத்தின் முருக திருத்தலமுமாகிய யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (05.09.2021) பக்திபூர்வமாக நடைபெற்றது.

இன்று காலை வசந்தமண்டப பூசை,கொடித்தம்ப பூசை என்பன இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சண்முகநாதப் பெருமான் இன்று காலை-07 மணியளவில் ஆலய உள்வீதியில் எழுந்தருளி வலம் வந்தார்.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, நாதஸ்வர-தவில் முழக்கங்களுடன் சிறிய வண்ணத் தேரில் வேற்பெருமான் வள்ளி, தெய்வயானை நாயகியர் சமேதரராக உள்வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.

காலை 08.05 மணியளவில் சிறிய தேர் இருப்பிடம் சென்றடைந்ததைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றது.

தொடர்ந்து வசந்தமண்டபத்தில் பச்சை சாத்தப்பட்டு சண்முகநாதப் பெருமான் திருவூஞ்சலில் அசைந்தாட திரு ஊஞ்சற் பாட்டு ஓதப்பட்டது. தொடர்ந்து விசேட தீபாராதனைகள் இடம்பெற்றது.தேவாரம், திருப்புகழ் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆலய உள்வீதியில் தெற்கு வாசல் எல்லை வரை மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த சண்முகநாதப் பெருமான் மீண்டும் இருப்பிடம் சென்றடைந்தார்.

அதனைத் தொடர்ந்து சிறிய தேரில் உள்வீதியில் எழுந்தருளி வலம் வந்த நல்லை வேற்பெருமானுக்கு விசேட அபிஷேகம்,பூசை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன.

இதேவேளை,வருடாவருடம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா இலட்சோப இலட்சம் அடியவர்களின் பங்குபற்றுதலுடனும் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்ற போதிலும் தற்போது நாட்டிலும், யாழ். மாவட்டத்திலும் தலைவிரித்தாடும் கொரோனாப் பெருந் தொற்று மற்றும் இதன்காரணமாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக ஆலய உள்வீதியில் மாத்திரம் மிக எளிமையான முறையில் இடம்பெற்றது.

ஆலய சிவாச்சாரியார்கள், ஆலய நிர்வாகத்தினர், ஆலய நாதஸ்வர,தவில் கலைஞர்கள் மற்றும் நல்லூர்க் கந்தப் பெருமானின் அணுக்கத் தொண்டர்கள் எனச் சுமார்-25 இற்கும் உட்பட்டவர்களுடன் மாத்திரம் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் இன்றைய தேர்த் திருவிழா நடந்தேறியது.

வழமையாக தேர்த் திருவிழா நாளில் நல்லை சண்முகநாதப் பெருமான் ஆலய வெளிவீதியில் சித்திரத் தேரில் வீதி உலா வருகின்ற போதும் இம்முறை சிறிய தேரில் வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் ஆலய உள்வீதியில் வலம் வந்த காட்சி காணற்கரிய அரியகாட்சியாக அமைந்திருந்தது.

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் அடியவர்கள் ஆலயச் சூழலில் ஒன்றுகூடலாம் என்பதால் ஆலயச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், வருடம் தோறும் தேர்த் திருவிழா நாளில் கடல் அலை போல் நிரம்பிக் காட்சியளிக்கும் நல்லூர்க் கந்தன் ஆலயத் திருவீதிகள் மற்றும் ஆலயச் சூழல் சனசந்தடியின்றி வெறிச் சோடிக் காணப்பட்டது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)