சற்றுமுன் நடந்தேறிய நல்லூரான் கொடியிறக்க உற்சவம் (Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் கொடியிறக்க உற்சவம்(துவஜா அவரோகணம்) இன்று திங்கட்கிழமை(06.09.2021) பிற்பகல் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து நாதஸ்வர- தவில் முழக்கங்களுடன் வேற்பெருமான்,வள்ளி,தெய்வயானை மற்றும் சண்டேஸ்வரப் பெருமான் ஆகிய மும்மூர்த்திகளும் வெண் பட்டாடைகள்,வெண் மலர்மாலைகள் சூடிக் கொடித் தம்பத்தடியை வந்தடைந்தனர்.

கொடியிறக்க உற்சவத்துக்கான பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடித்தம்பத்தடியைச் சூழச் சிவாச்சாரியார்கள் கைகளில் பூக்களை ஏந்தி நிற்க, சிவாச்சாரியார் விசேட மந்திர உச்சாடனம் மேற்கொண்டார்.

நாதஸ்வரம்,தவில் முதலிய மங்கள வாத்தியங்கள் முழங்க,சங்கு,சேமக்கலம், காண்டாமணிகள் ஓசைகள் எழுப்ப, சிவாச்சாரியார்கள் மலர்கள் தூவ இன்று பிற்பகல்-05.30 மணியளவில் நல்லைக் கந்தன் கொடியிறக்கம் சிறப்பாக நடந்தேறியது.

கொடியிறக்க வைபவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து வேற்பெருமான் மயில் வாகனத்திலும்,வள்ளி,தெய்வயானை நாயகியர் அன்ன வாகனத்திலும்,சண்டேஸ்வரர் இடப வாகனத்திலும் உள்வீதியில் வீதிவலம் வரும் திருக்காட்சி இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மீண்டும் மும்மூர்த்திகளும் உள்வீதியில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.இதன்போது மெளன உற்சவமும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)