கிளிநொச்சி, முல்லைத்தீவு விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி (Video)

குறுகிய காலப்பகுதியில் தரமான  சேதனப் பசளையினை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்யும் வகையிலான “சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் ” ஒன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

உலக வங்கி நிதி அனுசரணையுடன் விவசாய அமைச்சின் கீழான காலநிலைக்குச் சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தினால் (Climate Smart Irrigates Agriculture Project – CSIAP) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மண்டக்கல்லாறு மற்றும் பேராறு நீரேந்துப் பிரதேசத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  

விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப சேதனப் பசளை உற்பத்திக்கான உள்ளீடுகள், உபகரணங்கள், பயிற்சிகளை வழங்குவதோடு தொடர்ச்சியாக கண்காணித்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

முதலாவது தனியார் அலகுகள், இரண்டாவது  சிறிய அளவிலான வர்த்தக அலகுகள்,  மூன்றாவது மத்திய அளவிலான வர்த்தக அலகுகள் என இத்திட்டம் மூன்று பிரிவுகளாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தாங்கள் வயல் செய்யும் பரப்பளவு, சேதனப் பசளைக்கான உள்ளீடுகளை பெற்றுக் கொள்ளும் திறன், சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நில அளவு, தொழிலாளர் கிடைப்பனவு என்பவற்றை கருத்தில் கொண்டு மேற்படி திட்டங்களில் இணைந்து கொள்ள முடியும். 

மேற்படி திட்டத்தில் இணைவதன் மூலம்  சேதனப் பசளையை நோக்கிய ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய அனைவருமே சேதனப் பசளையினை பயன்படுத்துவதனை ஊக்குவிக்கவும், உறுதிப்படுத்தவும் விவசாயிகள் தங்களுக்கு தேவையானது போக மீதியை ஏனைய விவசாயிகளுக்கு விற்று இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியும்.  

வயல்நிலத்தை சேதனப் பசளையால் வளப்படுத்தி விளைச்சலின் அளவையும் தரத்தையும் அதிகரிப்பதோடு நஞ்சற்ற நெல்லுற்பத்தியை மேற்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

சமகால தேவைகருதி சேதனபசளை மற்றும் சேதன இரசாயன உற்பத்தி தொடர்பான நிகழ்சித்திட்டம் கீழ்காணும் அடிப்படையில் ரூபா 25 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக வடமாகாண விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து பயணத்தடை காலத்திலும், அதற்கு முன்னரும்  பொருத்தமான பிரச்சார உத்திகள் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பங்களும் கோரப்பட்டு வருகின்றது.      

குறித்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளை உங்கள் பகுதி விவசாய போதனாசிரியருடன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   

இத்திட்டத்தினால் குளம் மற்றும் வாய்கால் புனருத்தானம், விவசாயத்தில் காலநிலைக்கு சீரமைவான தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கல், விவசாய வீதிகள் புனரமைப்பு, விவசாய கிணறுகள் புனரமைப்பு, மின்சார பயிர்பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், நெல் உலரவைக்கும் தளங்கள்; மற்றும் களஞ்சியங்கள் அமைத்தல், கமநல கேந்திர நிலையங்களை மேம்படுத்தல், விவசாய தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கல் போன்ற செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக விபரங்களுக்கு: 021 228 4880

தரமான கூட்டெரு உற்பத்திக் கையேடு…

விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட திட்ட அலகுகள் தொடர்பான விளக்கம்…