முதியவர்களும் குழந்தைகளும் மனத்தால் ஒன்று

ஒவ்வொரு குடும்பத்திலும்,கிராமத்திலும் சுருங்கிய தோல்கள்,மங்கிய கண்கள்,நரைத்த முடியுடன் முதியவர்கள் உள்ளனர். அவர்களும் குழந்தைகளும் மனத்தால் ஒன்று என்று கூறப்படுகிறது.

இன்று(01.10.2021) சர்வதேச முதியோர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.முதியோரைக் கண்ணியமாகவும், கௌரவமாகவும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஒக்ரோபர் முதலாம் திகதி உலகம் முழுவதும் உள்ள முதியோர்களை மரியாதை செலுத்தவும், குடும்பம்,சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய அளப் பெரும் சேவைகளை நினைவுகூறும் வகையில் முதியோர் தின நாளில் முதியோர்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள்.

சுமார் அறுபது வயது தாண்டியவர்களை மூத்த பிரஜைகள் என்றாலும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கண்ணியம் கிடைப்பது குறைவு.

முதுமை என்பது விஞ்ஞான ரீதியாக நோக்கும் போது அவர்களின் உடலியல் செயற்பாடு, பாதிப்புக்கள் அதிகமாகும். இதனால், சரீர உணர்வு,சக்தி குறையத் தொடங்கும்.

இளமைக்கு எப்போதும் முதுமை பற்றிய அறிவு இருத்தல் வேண்டும். காவோலை விழுகிறதென்று குருத்தோலை சிரிக்க முடியாது. அந்தக் குருத்தோலையும் ஒருநாள் காவோலையாக மாறும் என்பது மனித வாழ்க்கையின் அத்தியாயம் ஆகும்.

முதன்முதலாக 1991 இல் சர்வதேச முதியோர் தினம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையின் கணக்கின் படி பத்துப் பேருக்கு ஒருவர் என்ற நிலையில் முதியோர் உள்ளனர்.

முதியோர் சுதந்திரம்,பங்களிப்பு,முதியோரை மதித்தல் அவர்களின் நல்ல விடயங்களை பின்பற்றுதல் என்பன முதியோர் தினத்தில் முக்கியமான விடயங்களாக கொள்ளப்படுகின்றது. முதியோரைப் பராமரிப்பதை சுமையாக கருதும் பிள்ளைகள் இன்றைய காலத்தில் அதிகமாகவுள்ளனர். இதனால், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதும், அல்லது முதியவர்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதும் அதிகரித்துச் செல்லுகின்றது.

முதியோர் இல்லங்களைக் காணும் போதெல்லாம் இதயமுள்ள ஒவ்வொருவருக்கும் முள் தைத்தது போன்று காணப்படும். இன்றைய சமுதாயம் நாளை நாமும் முதியோர் ஆவோம் என்பதை மறந்து தமது சுதந்திரத்திற்காகத் தம்மை வளர்த்த பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது எந்தவகையிலும் நியாயம் ஆகாது.

இன்றைய முதியோர்கள் அன்றைய காலத்தில் எமக்காக நிலங்கள்,சொத்துக்கள்,இயற்கை வளங்களைப் பேணி எமக்காகப் பாதுகாத்த காரணத்தால் நாம் இன்று சொந்தக் காணி,எமது ஊர் என இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றோம் என்பது நிதர்சனம்.

ஞாபகமறதி காரணமாக நம்மிடம் கேட்டவற்றையே திரும்பத் திரும்பக் கேட்பர். நாம் கோபம் கொள்ளாமல் அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். நாம் குழந்தைகளாகவிருந்த காலத்தில் அறிவு சார்ந்த கதைகளையும், வீரம், நீதிக்கதைகளைக் கூறி எம்மை ஆற்றல் உள்ள மனிதர்களாக உருவாக்கினார்கள்.

எமது வீட்டில் உள்ள முதியோருக்கு முதியோர் தினம், பண்டிகைகள்,அவர்களது பிறந்த நாளுக்கு புது ஆடைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பதன் ஊடாக நாம் அவர்களின் பாசத்தையும் அன்பையும் பெறலாம். அவர்கள் இவ் உலகில் வாழும் காலம் வரை சந்தோசமாக வைத்திருக்க நாம் முயல வேண்டும்.எமது குடும்பத்திலுள்ள நல்ல,கெட்ட விடயங்களை அவர்களிடம் பகிர்ந்தால் அவர்கள் மூலம் நல்ல கருத்துக்கள் கிடைக்கும்.

முதியோர் தினத்தில் அவர்களின் சாதனைகளையும், அறிவு, ஆற்றல், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளையும் கௌரவித்து அவர்களை மகிழ்விப்போம்.

(கட்டுரையாக்கம்:-பானு)