ஈழ ஊடகத் துறையின் மூத்த ஆளுமை கானமயில்நாதன் காலமானார்: கடந்து வந்த பாதை….

ஈழ ஊடகத் துறையின் அடையாளமாகவும், மூத்த ஆளுமையாகவும் விளங்கிய மூத்த ஊடகவியலாளரும், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ம.வ.கானமயில்நாதன் இன்று திங்கட்கிழமை(22.11.2021) அதிகாலை நல்லூரில் தனது 79 ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

யாழ்.வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கைலாசபிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ம.வ.கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம்- 25 ஆம் திகதி பிறந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நெடுங்காலம் வெளிவந்து கொண்டிருக்கும் நாளாந்த தமிழ்ப் பத்திரிகையான உதயன் பத்திரிகை ஈஸ்வரபாதம் சரவணபவனால் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் வாழ்வின் இறுதிக் காலம் வரை சுமார்-37 வருடங்கள் அவர் மேற்படி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பெரும் பணிகள் செய்துள்ளார்.

காலைக்கதிர் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சுமார் இரண்டு வருடங்கள் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற நெருக்கடியான காலகட்டத்தில் தாயகத்திலிருந்து ஊடகப் பணியாற்றிய மிகச் சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுள் கானமயில்நாதனும் ஒருவர். யுத்தத்தின் உச்சம் காரணமாக வலிகாமம் பிராந்தியம் மற்றும் யா.நகர், யாழ்.நகரை அண்டிய பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. அப்போது ‘உதயன்’ பத்திரிகை உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் யாழ்.நகரின் பிரதான அலுவலகத்திலிருந்து இடம்பெயர்ந்து தென்மராட்சியில் சரசாலை எனும் இடத்தில் தற்காலிக அலுவலகமொன்றை அமைத்து இயங்கிய போதும் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் கானமயில்நாதன் மிகுந்த அக்கறை காட்டினார்.

அவசரகால ஒழுங்குமுறை எண்- 1 ஐப் பயன்படுத்தி இயற்றப்பட்ட கடுமையான சட்டத்தைப் பயன்படுத்தி ‘உதயன்’ பத்திரிகை இலங்கை அரசாங்கத்தால் 2000 ஆம் ஆண்டு மே மாதம்-19 ஆம் திகதி மூடப்பட்ட போதும், உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கிய பின் இலங்கை இராணுவம் ஏ-9 நெடுஞ்சாலையை மூடிய பின் யாழ்.மாவட்டத்தில் மருந்து மற்றும் செய்தித்தாள் மற்றும் அச்சிடும் மை உள்ளிட்ட பிற பொருட்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்ட போதும் ‘உதயன்’ பத்திரிகை நாளாந்தம் வெளிவருவதில் அவரது பங்கு அளப்பரியது.

2006 ஆம் ஆண்டு மே மாதம்-02 ஆம் திகதி உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உதயன் பணியாளர்கள் இருவர் உயிரிழந்ததுடன் பத்திரிகை அலுலகத்தின் பெறுமதியான சொத்துக்கள் பலவற்றிற்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. இதன்பின்னரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்யாதரன் 2009 ஆம் ஆண்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஊடகவியலாளர்கள் பலரும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும், ஊடக அடக்குமுறைகளைத் தாண்டி உதயன் பத்திரிகை தொடர்ந்தும் வெளிவருவதற்கு வழிசமைத்தவர்.

பிரான்ஸின் தலைநகர் பரிஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச ரீதியாக வழங்கிவரும் ஊடக சுதந்திரத்துக்கான விருதுகளில் மிக முக்கிய விருது உதயனுக்கு கடந்த- 2013 நவம்பர் 27 ஆம் திகதி வழங்கப்பட்டது. பிரான்ஸின் வடகிழக்குப் பிராந்தியமான ஸ்ரார்ஸ்பேர்க்கில் உலகத்தின் பல நாடுகளிளிலுமிருந்து ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த மேற்படி விருது வழங்கும் நிகழ்வில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம. வ. கானமயில்நாதன் மற்றும் உதயன் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் இணைந்து இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

ஊடகத் துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியான சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியமைக்காக கடந்த- 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்- 16 ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தினால் இவர் கெளரவிக்கப்பட்டிருந்தார்.

ஊடகத் துறையில் இவர் ஆற்றிய பெரும் பணிகளைக் கெளரவித்துக் கடந்த-2020 ஆம் ஆண்டு பங்குனி மாதம்-08 ஆம் திகதி ‘உதயன்’ பத்திரிகை நிர்வாகத்தால் இவருக்கு “வாழ்நாள் பிரதம ஆசிரியர்” பதவி வழங்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.

இவர் தனது வயோதிபக் காலத்திலும் ஊடகத் துறையை அதிகம் நேசித்ததுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களிலும், மூத்த ஊடகவியலாளர்களின் இறுதி அஞ்சலிக் கூட்டங்களிலும், நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

இதேவேளை,அவரது இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை(23.11.2021)முற்பகல்-10 மணியளவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(தொகுப்பு:- செ.ரவிசாந்)