சிறப்பிக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழா: வான வேடிக்கைகள், வெடிகளால் ஆரவாரித்த யாழ்.நகரம் (Videos, Photos)

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரபல தொழிலதிபருமான வாமதேவன் தியாகேந்திரனின் பெரும் நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை(02.12.2021) பிற்பகல் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

குறித்த விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராகவும், தியாகந்திரனின் புத்திரன் தியாகேந்திரன் அர்ச்சுனா, புத்திரி நிலாஜினி தியாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

விழாவில் பாரம்பரியக் கண்டிய நடனத்துடன் வடக்கு ஆளுநர் மற்றும் யாழ்.நாக விகாராதிபதி ஆகியோர் விழா மேடை நோக்கி வரவேற்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டுத் திறப்பு விழா இடம்பெற்றது.

ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்தியம்பும் வகையிலான நினைவுக்கல் மூன்று மொழிகளிலும் திறந்து வைக்கப்பட்டது.

ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துருவை வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தனர். இதன்பின்னர் ஆரியகுளத்தின் முன்னைய தோற்றத்தை வெளிக்காட்டும் வகையிலான படங்களுடன் கூடிய நினைவுப் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வெடிகள் கொளுத்தப்பட்டதுடன் கண்களைக் கவரும் வகையிலான வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.

இதன்போது ஆரியகுளம் புனரமைப்பிற்குப் பெரும் நிதி உதவி அளித்த தியாகேந்திரனின் மேலான பணிகளைப் பாராட்டி யாழ்.மாநகரசபை ‘அறக்கொடை அரசன்’ எனும் உயர் விருதை வழங்கிக் கெளரவித்தது. குறித்த விருதினைத் தியாகேந்திரனின் புத்திரனும், புத்திரியும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

மேற்படி விழாவில் ஈழத்தின் பிரபல நாதஸ்வரக் கலைஞர் கே.பி.குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.

நாத சங்கமம் நிகழ்வு நிறைவுற்ற பின்னர் தாள வார்த்தியக் கலைஞர் வரதராஜா பானுதீபனுக்கு தியாகி அறக்கொடை நிறுவுனரும், பிரபல தொழிலதிபருமான தியாகேந்திரனால் “தாளலய வித்தகன்” எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. குறித்த விருதினையும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையையும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தியாகந்திரனின் புத்திரன் தியாகேந்திரன் அர்ச்சுனா, புத்திரி நிலாஜினி தியாகேந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கிக் கெளரவித்தனர்.

ஆரியகுளம் புனரமைப்பின் திறப்பு விழாவை ஒட்டி ஆரியகுளத்தைச் சுற்றிப் பல வர்ண மின்விளக்குகள் ஒளிவெள்ளம் பாரப்பிய காட்சி அழகுக்கு மேலாக அழகைச் சேர்ப்பதாக அமைந்திருந்தது. அதுமாத்திரமன்றித் தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தியது.

மேற்படி விழாவில் இந்து, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் ஆகிய நால் மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், யாழ்.மாநகரசபையின் ஆணையாளர், யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மிகவும் தொன்மையான, தமிழ்மக்களின் வரலாற்றுடன் தொடர்புடைய மரபுரிமைச் சின்னமாக யாழ்.நகரில் ஆரியகுளம் விளங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு, காணொளிகள் மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)