கொக்குவிலில் Workshop அமைப்பதற்கான அடிக்கல் டேவிட் பீரிஸ் மோட்டார்க் கம்பனி நிறுவனத்தால் நாட்டி வைப்பு(Video, Photos)

வடமாகாணத்தில் உள்ள பஜாஜ், KTM மற்றும் ஏனைய 4 சக்கர வாகனங்களுக்குத் தரமான மற்றும் செளகரியமான விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்கும் நோக்கில் டேவிட் பீரிஸ் மோட்டார்க் கம்பனி (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனம் 405, பிறவுண் வீதி யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் DPMS Workshop, பஜாஜ் அசல் உதிரிப்பாக காட்சியறை என்பவற்றை நிறுவவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(02.12.2021) முற்பகல்-10 மணி முதல் இடம்பெற்றது. வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் டேவிட் பீரிஸ், குழுத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் வடமாகாணத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தலைமையகப் பொறுப்பதிகாரி சமிலி பலிகேன, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன், தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் எஸ்.நிரஞ்சன், யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.முகுந்தன், டேவிட் பீரிஸ் குழுமத்தின் உதிரிப்பாகப் பணிப்பாளர் ஜெயந்த ரத்நாயக்க, வாகன விற்பனைப் பணிப்பாளர் நாலக்க மடுக்கல்ல, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கொக்குவில் கிழக்கு கிராம சேவையாளர் எஸ்.றீகன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)