பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாகத் தாக்கிக் கொலை: இதுவரை 100 பேர் கைது!(Photo)

பாகிஸ்தான் சியல்கோட் பகுதியில் இலங்கைப் பணியாளர் ஒருவர் கலகக்காரர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுப் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதைக்குட்படுத்திக் கொலை செய்துவிட்டு உடலை எரியூட்டியுள்ளதாகப் பாகிஸ்தானின் DON இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

சியல்கோட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் பெயர் பிரியந்த குமார எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் தொழிலாளர்கள் இலங்கையரைக் கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஊழியர்கள் தொழிற்சாலையைச் சேதப்படுத்திப் போக்குவரத்தை தடுத்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதுவோர் அவலமான சம்பவம் எனப் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் ஹுஸ்மான் புஸ்டார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், குறித்த இலங்கைப் பிரஜை கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்திக் கடமையை நிறைவேற்ற அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என இலங்கை எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சியல்கோட் நகரில் நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்த நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறுவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் சட்டத்திற்கு அமையத் தண்டனை வழங்கப்படும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.