குப்பிழான் தைப்பொங்கல் விழாவில் மூத்த விவசாயிகள் மூவருக்கு ‘வேளாண் சுடர்’ விருது வழங்கிக் கெளரவம்(Video,Photos)

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம்-கனடாவின் அனுசரணையில் தைப்பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(23.01.2022) பிற்பகல் குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் மேற்படி சனசமூகநிலையத் தலைவர் இ.மகேஸ்வரராஜ் தலைமையில் மிகவும் சிறப்புற இடம்பெற்றது.

விழாவில் சிறப்பு நிகழ்வாக குப்பிழானைச் சேர்ந்த மூத்த விவசாயிகளான ‘சின்னத்தம்பி அண்ணை’ எனக் கிராம மக்களால் அழைக்கப்படும் முருகேசு தில்லையம்பலம், ‘நாகையா’ எனக் கிராம மக்களால் அழைக்கப்படும் துரையப்பா நாகமணி, ‘சொக்கன் ஐயா’ என அழைக்கப்படும் சின்னப்பொடி சரவணமுத்து ஆகியோர் ‘வேளாண் சுடர்’ எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

விழாவில் விருந்தினர்களாகக் கலந்து கொண்ட வலிகாமம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.முரளிதரன், சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் அதிபர் திருமதி. அ.சிவஞானம், டான் தொலைக்காட்சிச் சேவையின் முகாமையாளர் இ.செல்வச்சந்திரன், குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய உப அதிபர் திருமதி.சி.தனஞ்செயன் ஆகியோர் மூத்த விவசாயிகளுக்கான விருதுகளையும், கெளரவங்களையும் சம்பிரதாயபூர்வமாக வழங்கிக் கெளரவித்தனர்.

மலர்மாலைகளை அணிவிப்பதற்காக மூத்த விவசாயிகளின் குடும்ப உறவுகள் விழா ஏற்பாட்டாளர்களால் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, குப்பிழானைச் சேர்ந்த எட்டு மூத்த விவசாயிகள் மேற்படி விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்த போதும் ஏனைய ஐவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட மூவரும் ‘வேளாண் சுடர்’ விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)