எரிபொருள் இன்மையால் தடைப்பட்ட காரைநகர்- ஊர்காவற்துறைப் பாதைச் சேவை!

யாழ். காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாகப் பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயைத் தேவைக்கு ஏற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்குச் சீரான சேவையை வழங்க வேண்டும். இதை விடுத்துக் கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதைச் சேவை இடம்பெறாமையால் தனியார் படகுகளில் மோட்டார்ச் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும், உதிரிப்பாகங்களை அதிக விலைக்குப் பெற்றுச் சீர் செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் யாழ்.அரசாங்க அதிபர் உடனடிக் கவனம் செலுத்திப் பாதைச் சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)